(செ.தேன்மொழி)
மீடியாகொட பகுதியில் இளைஞனனொருவனின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரதேச சபை உறுப்பினர் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

 அதேவேளை சந்தேகநபருக்கு அடைக்களம் கொடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மீடியாகொட பகுதியில் கடந்த 25 ஆம் திகதி மாலை 24 வயதுடைய  யூ.எச். தரிந்து குணசேகர எனப்படும் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த இளைஞனின் கையை வெட்டி பிரிதொரு இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர். எனினும் பின்னர் சந்தேக நபர்கள் நால்வரும் தாமாகவே மிடியாகொட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதற்கமைய இன்னொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, இந்த கொலையை மீடியாகொட பகுதியைச் சேர்ந்த பட்டபொல பிரதேச சபையின் உறுப்பினரான சக்தி மதுஷங்க என்ற நபரே திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், அவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றால், 071-8591481 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு அல்லது மீடியாகொட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு அல்லது 1997 என்ற அவசர தகவல் பிரிவுக்காவது தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதிமிக்க சன்மானம் வழங்கப்படுமெனவும், சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.