வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அநேக இடங்களில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அத்திணைக்களம் மேலும் எதிர்வுகூறியுள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று (30) பி.ப. 2.00 மணிக்குப் பின் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதோடு அநேக இடங்களில் 50 மில்லிமீற்றரிற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையானகடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வுகூறியுள்ளது.