ஒன்றரை வயதுடைய குழந்தையின் வயிற்றில் 3 கிலோ நிறையுடைய சிசுக்கட்டியொன்றை அறுவை சிகிச்சை மூலம் வெட்டியகற்றிய சம்பவமொன்று இந்தியாவின் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

 

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த ராஜூ மற்றும் சுமதி ஆகியோரின் ஒன்றரை வயது மகள் நிஷா. 

குறித்த குழந்தைக்கு சில மாதங்களாக வயிறு வீங்கியபடி இருந்தது. இதனால், மேட்டுப்பாளையத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தனர். 

ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் சிசு வளர்வதை கண்டு பிடித்தனர். மேலும் கல்லீரல், மண்ணீரல் ஆகியவை இடம் மாறி இருப்பதையும் கண்டறிந்தனர். 

இதையடுத்து மருத்துவர் விஜியகிரி தலைமையிலான  குழுவினர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, குழந்தை நிஷாவுக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ எடை கொண்ட சிசு கட்டியை அகற்றினர். 

அந்த கட்டியில் குழந்தையின் முடி, தாடை எலும்புகள் உள்ளிட்டவை இருந்தன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் நிஷா ஆரோக்கியத்துடன் இருப்பதாக குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் விஜியகிரி கருத்துத் தெரிவிக்கையில்,

தாயின் வயிற்றில் இரட்டை கரு உருவாகும்போது அதில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை அரவணைத்து குழந்தையின் வயிற்றில் உள்ளடங்கி குழந்தையாக உருமாறியிருக்கிறது. 

இதனை ஆங்கிலத்தில் டுவிண்டெரி எனக் கூறுவர். கருத்தரிக்கும் 10 இலட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற விசித்திரமான நிகழ்வு நடைபெறும்.

 உரியநேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை வயிற்றில் இருந்த பனிக்குடம் உடைந்து அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.