(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் உதய கம்மன்பில போன்றோரது கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளாமல் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகளும் பிளவுகளும் உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரொருவர் இந்தியாவில் இருக்கின்றார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஏதேனும் இரகசியங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தெரிந்திருக்கக் கூடும். அதனை வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதறகாகவா அரசாங்கம் இவ்வாறு தேசிய சொத்துக்களை அவ்வாறான நாடுகளுக்கு விற்று கொண்டிருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பில் நாம் கேள்வியெழுப்பிய போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போதிலும் இது வரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

சர்வதேச உறவுகளை சுமூகமாக பேணுவதற்காக தேசிய சொத்துக்களை விற்க வேண்டிய தேவை கிடையாது. எவ்வாறிருப்பினும் காலம் காலமாக மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காணப்படுகின்ற கறும்புள்ளி தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மேலும் ஸ்திரமடைந்துள்ளது என்றார்.