(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் 700 - 800 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற போதிலும் சமூகப்பரவல் ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.

தற்போது கொவிட் தொற்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது. குறுகிய காலத்திற்குள் 44 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ள நிலையிலும் அரசாங்கம் இது வரையில் அதற்கான எந்த வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ராஜபக்ஷ சகோதரர்கள் வசம்154 அரச நிறுவனங்கள் : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு  | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போது கொவிட் தொற்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது. நாளாந்தம் சுமார் 700 - 800 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற அதே வேளை மரணங்களின் எண்ணிக்கை 300 ஐ அண்மித்துள்ளது.

ஆனால் நாட்டில் சமூகப்பரவல் ஏற்பட்டுள்ளது என்பதை இன்றும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. 

ஆரம்பத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் போது எந்த கொத்தணியூடாக தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள் என்று கூறப்படும்.

ஆனால் இப்போது அவ்வாறில்லை. அவ்வாறு இருக்கின்ற போதிலும் சமூகப்பரவல் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து கிடைத்துள்ள தடுப்பூசிகளை சுமார் இரண்டரை இலட்சம் பேருக்கு மாத்திரமே வழங்க முடியும். ஆனால் குறுகிய காலத்தில் 44 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்வனவு செய்யும் முறை தொடர்பிலும் அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை.

இவ்வாறிருக்க மக்களின் வாழ்க்கை செலவு ஒருபுறம் அதகரித்துச் செல்கின்ற நிலையில் மறுபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து செல்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 10 இற்கும் மேற்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ள போதிலும் அவரால் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. 

இலங்கைக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ஒரே வழி பண்டாரநாயக்க விமான நிலையமாக மாத்திரமே காணப்பட்டது. ஆரம்பத்திலேயே இங்கு முறையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றார்.