முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் தமிழ் மக்­களை புறக்­க­ணித்த நிலையில் நாம் அவர்­களை ஆத­ரித்து செயற்­ப­டு­வதே இன­வா­தி­க­ளுக்கு முக்­கிய பிரச்­சி­னை­யாக தெரி­கின்­றது. நாட்டின் தேசிய பாது­காப்பு விட­யத்தில் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களை விடவும் நாம் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றோம். அதேபோல் நாம் தமி­ழர்­களை ஒரு­போதும் கைவி­டப்­போ­வதும் இல்லை என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

மக்­களின் விருப்பம் இன்றி இந்த ஆட்­சியை எந்த சக்­தி­க­ளி­னாலும் வீழ்த்த முடி­யாது. தமிழ் மக்­களின் மீது நாம் அக்­க­றை­யு­டனும் அவர்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­பதில் பொறுப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நாட்டின் தேசிய பாது­காப்பு விட­யத்தில் அர­சாங்கம் பல­வீ­ன­மாக செயற்­ப­டு­வ­தாக பொது எதி­ர­ணி­யினர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வரும் நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே மங்­கள சம­ர­வீர மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

இன்று நாடு சரி­யான திசையில் பய­ணிக்­கின்­றது. இது­வரை காலமும் எம்­மீது சர்­வ­தேச நாடுகள் முன்­வைத்த விமர்­ச­னங்கள் அனைத்தும் இன்று நிறுத்­தப்­பட்டு அனைத்து நாடு­க­ளி­னதும் உத­வி­யுடன் நாம் நாட்டை முன்­கொண்டு செல்­கின்றோம். இந்த நாட்டில் ஜன­நா­யகம் நிலை­நாட்­டப்­பட்டு ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யா­கின்­றது.

இந்த ஒரு­வ­ருட காலத்தில் நாட்டில் எவ்­வாறு மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன என்­பதை இன்று மக்கள் உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ளது. எனினும் நாம் முழு­மை­யாக நாட்டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­விட்டோம் என கூற­வில்லை. இந்த ஆட்­சி­யிலும் குறை­பா­டுகள் உள்­ளன. ஆனால் அவை அனைத்தும் சரி­செய்­யக்­கூ­டி­ய­வை­யே­யாகும். . இந்த பிரச்­சி­னை­களை நிவர்த்தி செய்ய எமக்கு கால அவ­கா­சமும் உள்­ளது.

எனினும் கடந்த காலத்தில் நாட்டில் காணப்­பட்ட ஊழல்,மோச­டிகள் மற்றும் கொலை, கொள்ளை, வெள்­ளைவேன் கடத்தல் என்ற அனைத்­தையும் நாம் முடி­வுக்கு கொண்­டு­வந்­துள்ளோம். குற்­ற­வா­ளிகள் தொடர்பில் கடி­ன­மான வகையில் செயற்­பட்டு வரு­கின்றோம். குற்­ற­வா­ளி­களை தண்­டிக்கும் வகையில் அர­சாங்கம் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதேபோல் நாட்டில் நல்­லி­ணக்கம் ஒன்றை நோக்­கிய பய­ணத்தை நாம் ஆரம்­பித்­துள்ளோம். தமிழ் மக்­களின் மீது நாம் அக்­க­றை­யு­டனும் அவர்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­பதில் பொறுப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கின்றோம்.

எனினும் கடந்த காலங்­களில் அர­சாங்கம் தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை மூன்றாம் தரப்பு பிரச்­சி­னை­யா­கவே கரு­தி­யது. முக்­கி­ய­மான தரு­ணங்­களில் தமிழ் மக்­களை ஒன்­றி­ணைத்து பய­ணிப்­பதில் மஹிந்த தரப்­பினர் பின்­வாங்­கினர். அப்­போதும் அர­சாங்­கத்தில் பலர் இன­வாத கருத்­துக்­களை பரப்பி புலி­களை தமி­ழர்­க­ளுடன் ஒன்­றி­ணைத்து கருத்­துக்­களை வெளி­யிட்­டனர்.

அவ்­வா­றான நிலையில் எமது ஆட்­சியில் தமிழ் மக்­களின் நியா­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து வடக்கு கிழக்கு பகு­தி­களை மீளவும் அவர்­களின் கைகளில் ஒப்­ப­டைக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ளோம். அதை பொறுத்­துக்­கொள்ள முடி­யாது இன்றும் அதே இன­வா­திகள் புலிக் கதை­களை கூறி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.

ஆயினும் இந்த விட­யங்­களை நாம் கவ­னத்தில் கொள்­ள­வேண்­டிய தேவை இல்லை. நாட்டின் தேசிய பாது­காப்பு விட­யத்தில் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களை விடவும் நாம் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றோம். இதில் யாரும் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை. அதேபோல் நாம் தமி­ழர்­களை ஒரு­போதும் கைவி­டப்­போ­வதும் இல்லை.

மேலும் இந்த அர­சாங்கம் மக்­களின் பூரண விருப்­பத்­துடன் ஆட்­சியை நடத்தி வருகின்றது. அதேபோல் பிரதான இரண்டு கட்சிகளும் நாட்டில் தலைமைத்துவத்தை ஏற்று ஆட்சியை நடத்துகின்றன. அவ்வாறன நிலையில் மக்களின் விருப்பம் இன்றி இந்த ஆட்சியை எந்த சக்திகளினாலும் வீழ்த்த முடியாது. இன்று ஒரு அணியில் இருந்து எதிர்ப்பு குரல் எழுப்பும் நபர்களும் இன்னும் பல ஆண்டுகளுக்கு இவ்வாறே இருக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.