(எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளை நேரில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை மீண்டும் உறவினர்களுக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இச்சந்தர்ப்பத்தை வழங்க எதிர்ப்பார்த்து அது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, கைதிகளை பார்வை இடுவதற்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வழி காட்டல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக , வாரத்தில் ஒரு நாளில் மாத்திரம் விளக்கமறியல் கைதிகளை அவர்களது இரத்த உறவுகள் நேரில் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு மாதமொன்றில், ஒரு நாளில் மாத்திரம் தமது உறவினர்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளை பார்வையிட வருகை தரும் உறவினர்கள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உணவுப் பொருட்களை கொண்டு வருவதற்கான அனுமதியை  வழங்காமலிருக்கவும் ஆடைகளை மாத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.