(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 61,000 ஐ கடந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக நாளாந்தம் சுமார் 600 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

அத்தோடு கொழும்பு மாவட்டத்திலும் குறிப்பாக கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகளிலுமே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகின்றதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நேற்று புதன்கிழமை நாட்டில் இனங்காணப்பட்ட 742 உள்நாட்டு தொற்றாளர்களில் 189 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளான மட்டக்குளியில் 28, நாரஹேன்பிட்டவில் 27, கொழும்பு மாநகரசபை எல்லையில் 24, கொள்ளுபிட்டியில் 23, கோட்டையில் 15, மருதானையில் 13 எனவும் ஏனைய பகுதிகளிலும் கணிசமானளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை 06.00 மணி வரை 351 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 61,045 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 54,435 பேர் குணமடைந்துள்ளதோடு 6,320 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.