(செ.தேன்மொழி)

மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 1,160 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவற்றுள் 1,100 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

மேல்மாகாணத்திலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கமைய , இதுவரையில் 7 ஆயிரத்து 828 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 6 ஆயிரத்து 739 நிறுவனங்களில் சுகாதார விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டிருந்ததுடன் , 1,160 நிறுவனங்களில் அவை கடைப்பிடிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிறுவனங்களுள் 1,100 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில் , இன்று மாத்திரம் 830 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் , அவற்றுள் 759 நிறுவனங்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியிருந்தன. இதன்போது 71 நிறுவனங்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்திருக்கவில்லை.இந்த நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும். இதன்போது உரிய நிறுவனங்களின் முகாமையாளர்கள் மற்றும் நிர்வாகப்பிரிவினருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. அதற்கமைய இத்தகைய பொறுப்புகளில் இருப்பவர்கள் அது  தொடர்பில் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

இதேவேளை , தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தடுப்பு சட்டவிதிகளை பின்பற்றாத நபர்கள் தொடர்பில் மேல்மாகாணத்தில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலும் எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில் மேல்மாகாணத்தை தவிர்த்து நாட்டின் ஏனையப்பகுதிகளில் முகக்கவசம் அணியாமை தொடர்பில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,808 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுள் 2,600 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.