(நா.தனுஜா)

தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த குருந்தூர்மலை உள்ளிட்ட இடங்களின் தமிழர்களின் அடையாளங்களை முழுமையாக அழித்து, அங்கு இராணுவத்தினரின் உதவியுடன் சிங்கள பௌத்த அடையாளங்களை நிறுவுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

இது நில அபகரிப்புடன் ஒன்றிணைந்ததாக முன்னெடுக்கப்படும் இன அழிப்பாகும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, 

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு பகுதிக்கு அருகிலுள்ள தமிழர்களின் பாரம்பரிய கிராமமான குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைத் தகர்த்ததன் பின்னர், அங்கு நடைபெறும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நேற்று சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த இராணுவத்தினர் எம்மை உள்ளே செல்லவிடாமல் மறித்தார்கள்.

இவையனைத்தும் முல்லைத்தீவு மாவட்டக் கட்டளைத்தளபதியின் பணிப்புரைகளுக்கு அமைவாகவே நடைபெறுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஏனென்றால், உள்ளே செல்லவேண்டுமாயின் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் அனுமதிகோரவேண்டும் என்று அங்கு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் கூறவில்லை.

மாறாக இராணுவத்தளபதியே தமக்குக் கட்டளையிட வேண்டும் என்றே குறிப்பிட்டார்கள். இதனூடாக நில அபகரிப்புடன் இணைந்த கலாசார அபகரிப்பையும் முன்னிறுத்தி செயற்படும் முல்லைத்தீவு மாவட்டக் கட்டளைத்தளபதி தலைமையிலான இராணுவத்தினரின் செயற்பாடுகளைத் தெளிவாக அவதானிக்க முடிந்தது.

நீண்டநேர தர்க்கத்தின் பின்னர் குருந்தூர் மலைப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது, அங்கிருந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் தகர்க்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி அங்கு காணப்பட்ட சூலம் காணாமல் போயுள்ளது. ஏற்கனவே பட்டு (சால்வை) கட்டப்பட்ட சூலமொன்று அங்குள்ள குழியொன்றிலே இருப்பதை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க புகைப்படமெடுத்து, அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்போது அந்தக் குழியிலும் சூலம் இல்லை.

இவற்றினூடாக தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த இடங்களின் அடையாளங்களை அழித்து, அங்கே சிங்கள பௌத்த அடையாளங்களை நிறுவுதற்கான முயற்சியை இராணுவத்தினரின் உதவியுடன் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதுமாத்திரமன்றி  இதன்மூலம் நில அபகரிப்புடன் இனஅழிப்பும் மேற்கொள்ளப்படுகின்றமை வெட்டவெளிச்சமாகியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் உரிய சட்டநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.