(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது உருமாறிய புதிய வைரஸ் தொற்றும் இனங்காணப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவரது மாதிரியில் இந்த புதிய வகை வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸானது கொரோனா வைரஸை விட வேகமாக பரவக் கூடியது என்று சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது.

ஒரு வருடத்தில் 60 000 தொற்றாளர்கள்

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளராக சீனப்பெண்ணொருவர் இனங்காணப்பட்டு 27 ஆம் திகதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதற்கமைய இந்த ஒரு வருடத்தில் இலங்கையில் சுமார் 60,000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த 60, 000 தொற்றாளர்களில் 57 000 தொற்றாளர்கள் கடந்த ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதியின் பின்னர் உருவான இரண்டாம் அலையுடன் தொடர்புடையவர்களாவர். இதில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 23,449 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இதேவேளை கம்பஹாவில் 12,292 தொற்றாளர்களும் , களுத்துறையில் 4,624 தொற்றாளர்களும், கண்டியில் 3,066 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களிலும் கனிசமானளவு தொற்றாளர் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் ,இன்று புதன்கிழமை மாலை 6 மணி வரை 311 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 60,233 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 52,566 பேர் குணமடைந்துள்ளதோடு 7,379 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் 781 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

11 மாவட்டங்களில் 55 பகுதிகள் முடக்கம்

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியிலும் 11 மாவட்டங்களில் 55 பகுதிகள் நேற்று மாலை வரை முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பில் 8 கிராம அலுவலர் பிரிவுகள் , ஒரு வீட்டுத்திட்டம், கம்பஹாவில் 13 கிராம அலுவலர் பிரிவுகள் , களுத்துறையில் 6 கிராம அலுவலர் பிரிவுகள் , கண்டியில் 4 கிராம அலுவலர் பிரிவுகள் , மாத்தளையில் 3 கிராம அலுவலர் பிரிவுகள் , மட்டக்களப்பில் 11 கிராம அலுவலர் பிரிவுகள் , குருணாகலில் 2 கிராம அலுவலர் பிரிவுகள் , வவுனியாவில் 4 கிராம அலுவலர் பிரிவுகள் , கேகாலை , அம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகள் என்பன முடக்கப்பட்டுள்ளன.

இன்று பதிவான மரணங்கள்

இன்று புதன்கிழமை கொரோனா மரணங்கள் இரண்டு பதிவானதையடுத்து நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு 15 மற்றும் ஹொரணை − கோனபொல பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஹொரணை − கோனபொல பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்ணொருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.