(செ.தேன்மொழி)

மேல்மாகாணத்தில் நாளை வியாழக்கிழமை முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்றாத நபர்கள் அனைவருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து சோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இன்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டும், எதிர்வரும் வார இறுதி தினங்களை கருத்திற் கொண்டும் மேல்மாகாணத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், கொழும்பிலிருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள், முகக்கவசம் அணியாது இருப்பவர்கள் , காலி முகத்திடல்  உட்பட பொதுஇடங்களில் நடமாடித்திரியும் நபர்கள் , மீன் மற்றும் மரக்கறி சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் இருக்கும் மக்களை இலக்கு வைத்து அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதனால் இந்த செயற்பாடுகளுக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில், சுகாதார விதிமுறைகளுக்கு  புறம்பாக செயற்பட்டதாக 1,088 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை , மேல் மாகாணத்தை தவிர நாட்டின் ஏனையப்பகுதிகளில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை தொடர்பில் இன்று காலை(27.01.2021) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம்திகமி முதல் இதுவரையில் 2,792 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.