வீட்டு தனிமைப்படுத்தல் உத்தரவினை மீண்டும் மீண்டும் மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய தைவானில் உள்ள தைச்சுங்கில் வசிக்கும் பெயரிடப்படாத இந்த நபர், சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு ஒரு வணிக பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் தனது அடுக்குமாடி கட்டிடத்தில் வீட்டு தனிமைப்படுத்தலில் உட்படுத்தப்பட்டார்.

இந்த தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர் குறைந்தது ஏழு முறையாவது உத்தரவுகளை மீறியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தனிமைப்படுத்தலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறுகையில், அயலவர்களில் ஒருவருடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையானது தாய்வானில் அபராதமாக பிறப்பிக்கப்பட்ட மிகப் பெரிய தொகையாகும். 

23 மில்லியன் மக்கள் வாழும் தாய்வான் நாட்டில் 889 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் ஏழு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் குறிப்பிடுகின்றன.