(எம்.மனோசித்ரா)
கொவிட் தடுப்பிற்கான தடுப்பூசி தற்போது அரச வைத்தியசாலைகளின் ஊடாகவே வழங்கப்படும். நாட்டில் சுமார் 1,060 அரச மருத்துவமனைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றினூடாக தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் என கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த ஒரு வருடமாக கொவிட் தொற்றுக்கான தீர்வொன்று கிடைக்குமா இல்லையா என்ற மனக்கவலையுடனேயே நாமனைவரும் இருந்தோம். தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் வைத்தியர்கள், தாதிகள் உள்ளிட்டோர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். எனவே தான் அவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை உரிய இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு வழங்குவதற்கும் சகல தயார்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் வழங்கப்பட்டாலும் அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பேணுவதும் அத்தியாவசியமானதாகும்.

நாம் வைத்தியசாலைகள், தனிமைப்படுத்தல் நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்குச் செல்லும் போது தொற்று ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. ஆனால் அதற்காக எமது தொழிலிலிருந்து எம்மால் மீள முடியாது. இது மிகவும் ஆபத்தான தொற்றாகும். எனவே மக்களனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.