-லோகன் பரமசாமி-

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பில் (IORA) அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் தமது மக்கள் மத்தியிலே இருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமது வரலாற்று, பண்பாட்டு உறவை மீளமைத்து கொள்வதை அடிப்படை எண்ணமாகக் கொண்டவை. 

அத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மாற்றங்களை எதிர்நோக்கியதாகவும் புவிசார் பொருளாதார நலன்களில் அங்கத்துவ நாடுகள் மத்தியில் அனுபவப்பகிர்வையும் பொருளார ஒத்துழைப்பையும் நோக்கமாகக் கொண்டது.

1995இல் இந்து மாகடல் விளிம்பில் வாழும் நாடுகள் அனைத்தையும் இணைத்து சமூக பொருளாதார மையமாகவும் அமைதி முயற்சிகளையும் கொண்ட ஒரு தளம் அமைய வேண்டுமென அன்றைய தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பிரேரித்திருந்தார். இந்த புரிதலும் அதிலிருந்து எழுந்த சிந்தனையும் ‘இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பு’ என்பதை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. 

ஆரம்பத்தில் 14நாடுகளை (அவற்றில் பெரும்பாலும் சிறு தீவுகள்) கொண்ட ஒரு அமைப்பாக இருந்ததுடன் தற்பொழுது 21 நாடுகளை அங்கத்துவ நாடுகளாக கொண்டு மேம்பட்ள்ளது. இதன் முதலாவது மாநாடு 1997ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

பல மிகச் சிறிய தீவுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பலதரப்பு நோக்கங்களை மையமாக கொண்ட அமைப்பு என்ற வகையில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் மிக முக்கியத்தவம் வாய்ந்ததொரு அமைப்பாக இது கருதப்படுகிறது. 

தற்போதைய அங்கத்துவ நாடுகளான அவுஸ்திரேலியா பங்காளதேஷ், கொமெரோஸ் தீவுகள், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகஸ்கர், மலேசியா, மொரிசியஸ், மொசாம்பிக், ஓமான், சீசெல்ஸ் தீவுகள், சிங்கப்பூர், சோமாலியா, தென்னாபிரிக்கா, இலங்கை, தன்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், யேமன் ஆகியவை அங்கத்தவ நாடுகளாகவும் சீனா எகிப்து பிரான்ஸ் ஜேர்மன், ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பேச்சு வார்த்தைகளுக்கான கூட்டு நாடுகளாகவும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைப்பு ரீதியாக நிலை எடுத்துள்ளன.

இந்து சமுத்திர கரையோரத்தை கொண்ட பெரும் பாலான நாடுகள் மத்தியில் பொதுவாக சமாதான பிராந்தியமாக இந்த பிராந்தியத்தை உருவகப்படுத்துவதில் முக்கிய கவனம் உள்ளது. இந்நாடுகள் தமது பொருளாதார நலன்களையும் வளர்ச்சியையும் மையமாக கொண்டு சமாதானக் கோட்பாட்டை முன்வைக்கின்றன. ஆனால் பலம் வாய்ந்த நாடுகளும் பூகோளத் தலைமைத்துவ நோக்கம் கொண்ட நாடுகளும் இந்து சமுத்திர பிராந்தியத்தை தமது பலப்பரீட்சைக் களமாக பார்க்கின்றன.

இந்து சமுத்திரத்தின் நடு நாயகமாக தன்னை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதில் இந்தியா மிக ஆர்வம் காட்டுகிறது. இந்து சமுத்திரத்தில் மாலைதீவு, இலங்கை, மொரிசியஸ், மியான்மர் ஆகிய நாடுகளை இந்தியா தனது இந்து சமுத்திர ஆதிக்கத்திற்கு துணையாக இருக்கும் நாடுகளாக் கொண்டுள்ளது. 

இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முழு பிராந்தியத்திற்குமான பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘சாகர்’ கோட்பாட்டு திட்டத்தை தற்போதைய இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது.  ‘சாகர்’ கோட்பாட்டின் அடிப்படையில் இந்தியாவை செயல்வினை மிக்கதொரு பிராந்திய தலைமைத்துவமாக மாற்றும் பார்வையைக் கொண்டுள்ளது. 

செயற்றிறன் மிக்க இந்தியத் தலைமைதுவத்தை ஏற்று கொள்வதில் இந்த பிராந்தியத்தில் உள்ள இதர பிராந்திய அரசியல் ஆளுமை கொண்ட சில பாத்திரங்கள் இந்த ‘சாகர்’ திட்டத்தை செயற்படுத்தும் நோக்கத்தில் நடைமுறைச் சிக்கல்களை உருவாக்க வல்லனவாக உள்ளன. உதாரணமாக இதே இந்து சமுத்திரத்தின் மேற்குக் கரையோரமாக இருக்க கூடிய சிறு தீவுகளின் அமைப்பான ஐ.ஓ.சி. எனப்படும் இந்து சமுத்திர ஆணையகம் இதற்கு சான்றாக உள்ளது.

1982ஆம் ஆண்டே பிரான்ஸ் நாட்டின் செல்வாக்கு கொண்ட சிறு தீவுகளான மொரிசியஸ், கொமொரோஸ், சீசெல்ஸ், மடகாஸ்கர், ரியூனியன் ஆகிய தீவுகள் தமதிடையே பொருளாதார நடவடிக்கைகளில்  ஒற்றுமையை உருவாக்கும் வகையிலும் மேற்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகரித்து காணப்படும் கடற்கொள்ளையர் சவல்களை எதிர்கொள்ளும் வகையிலும் தமது சிறிய அரசுகளுக்கு இடையிலான இந்த அமைப்பை உருவாக்கி இருந்தனர். இந்த தீவுகளில் ரியூனியன் தீவுகள் பிரான்ஸ் நாட்டின் காலனி நாடாக இன்னமும் இருப்பதால் பிரான்ஸின் வெளியுறவு துறையின் தலையீடு இந்த அமைப்பில் இருந்து வருகிறது. 

இதனால் பிரான்ஸின் வெளியுறவுக் கொள்கை நலன்களின் நிழலில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. மிக வினைத் திறனுடன் இந்த அமைப்பு தனது பிராந்தியத்தில் இயங்கி வருவதாலும் தமது பிராந்தியத்தில் நம்பிக்கைக்குரிய நன்கு நிர்வகிக்கப்பட்ட ஒரு ஆணையமாக கடந்த பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. 

இந்தத் தீவுகளில் பலர் இந்திய வம்சாவளியினராக இருந்த போதிலும், தமது உள்நாட்டு அலுவல்களில் பிரான்ஸிய மொழியையும் ஆங்கில மொழியையும் கொண்டிருப்பதால் இந்துத்துவ மேலாதிக்க இந்திய தலைமைத்துவத்தை மனதார ஏற்றுக் கொள்வதில் பெரும் தயக்கம் கொண்டதாக அவற்றின் தலைமைத்துவங்கள் உள்ளன. 

மேலைத்தேய பண்பாடை அதிகம் ஏற்று கொண்ட சிறு தீவு அரசுகளின் அமைப்பான இந்து சமுத்திர ஆணையகம் கடந்த ஆண்டு மார்ச் மாதமளவிலேயே இந்தியாவுக்கு பார்வையாளர் அந்தஸ்தை கொடுத்திருந்தது. இதனால் பிரான்ஸ் இந்து சமுத்திர பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தும் ஒர் அங்கமாக வெளிப்படையாக தென்படுகிறது. 

அத்துடன் தற்பொழுது மேற்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீன தலையீடுகளையும் அதனால் எழும் சவால்களை எதிர் கொள்ளம் வகையில் மூலோபாய உடன்படிக்கைகள் ஊடாக இந்தியாவுடன் இணைந்து பிரான்ஸ் செயற்பட்டு வருகிறது. 

இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ளபட வேண்டியது என்னவெனில் இந்து சமுத்திர பிராந்தியத்தை தனது ஏகபோக ஆதிக்க பிராந்தியம் என்ற  எண்ணத்தினை இந்தியா  கொண்டிருந்தாலும் பல்வேறு ஆதிக்க சக்திகளும் வலிமைமிக்க சிறு அமைப்புகளும் இந்து சமுத்திரத்தில் பதில் சவால் சக்திகளாக செயற்பட்டு வருகின்றன என்பது இங்கே காண கூடியதாகும்.   

மேலும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பில் பிரதி தலைமைத்துவப் பொறுப்பை 2021ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவம் வல்லரசுகளின் மூலோபாய போட்டியின் பேசு பொருளாக இலங்கையே தற்போது இருந்து வருகிறது. 

இந்தியாவின் அதீத ஈடுபாட்டினால்  இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் சேர்ந்து இணைந்திருத்தல் காரணமாக பெற்று கொள்ளகூடிய சர்வதேச சட்ட அங்கீகார நிலையும் இலங்கையின் தலைமைத்துவத்திற்கு கிடைக்கும் மேலதிக மதிப்பெண்களாகும்.