(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர், வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், புலிகளை சாடியதாகவே தேசிய உளவுச் சேவை, இராணுவ புலனாய்வுப் பிரிவு ஆகியன விசாரணையாளர்களுக்கு அறிக்கை அளித்திருந்ததாக சி.ஐ.டி. முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்தார். 

இந்நிலையில், குறித்த பொலிஸாரின் கொலைகளின் பின்னணியில் சஹ்ரானினால் நெறிப்படுத்தப்பட்ட குழுவினரே இருந்தமை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னரே கண்டறியப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 21 இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் முதன் முறையாக இன்றையதினம் சாட்சியமளிக்கும் போதே, அவர் இதனை வெளிப்படுத்தினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவான 42 ஆம் சிகிச்சையறையிலிருந்து ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. மேற்படி விசாரணை ஆணைக்குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் 31 ஆம் திகதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், ஏனைய சாட்சிகள் அனைத்தும் பூரணப்படுத்தப்பட்டு முக்கிய சாட்சியான ஷானி அபேசேகரவின் சாட்சிப் பதிவுகள் மட்டும் நேற்றும்(25.01.2021), இன்றும் (26.01.2021) இடம்பெற்றன.

ஆணைக்குழுவின் தலைவராக  ஜனக் டி சில்வா கடமையாற்றுகின்றார். இந்நிலையில் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதி  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து,  ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகிய 3 உறுப்பினர்கள் முன்னிலையில் இடம்பெற்றன.

ஷானி அபேசேகர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீதான குண்டுத் தாக்குதல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொலை முயற்சி, பாரத லக்ஷ்மன் படுகொலை, உடதலவின்ன படுகொலை, கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதல், முன்னாள் எம்.பி.ரவிராஜ் படுகொலை, எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, தாஜுதீன் படுகொலை, லசந்த விக்ரமதுங்க படுகொலை,  தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலராக இருந்த போது பித்தளை சந்தியில் வைத்து அவர் மீது நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், அங்குலானை இரட்டைப் படுகொலை, 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட  பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தவர் என்பதும் பதிவு செய்யப்பட்டது.

 எவ்வாறாயினும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான், சி.ஐ.டி.யிலிருந்து காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றப்படும் போதும், சி.ஐ.டி. பணிப்பாளராக 8000 விடயங்கள் குறித்து மேற்பார்வை செய்துகொண்டிருந்ததாக ஷானி அபேசேகர  சாட்சியமளித்தார்.

இதனைத் தொடர்ந்து சாட்சியங்களை நெறிப்படுத்திய அரசின் சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்க, 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு முன்னர் கடந்த 2018 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட விடயம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

 குறித்த சம்பவம் தொடர்பில், சம்பவ தினமே விசாரணைகளை சி.ஐ.டி. பொறுப்பேற்றதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்கவின் கீழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித்த திஸாநாயக்க, பொலிஸ் பரிசோதகர் உபாலி, சார்ஜன் மெண்டிஸ் உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் ஷானி அபேசேகர குறிப்பிட்டார்.

இதன்போது இந்த சம்பவத்தில் சந்தேகத்தில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மட்டக்களப்பு பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்ட பின்னர் வாழச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ததாகவும் ஷானி அபேசேகர கூறினார்.

இதன்போது, குறித்த சம்பவத்தின் 5 நாட்களின் பின்னர் சம்பவ இடத்துக்கு அருகே இருந்து ஒரு பாடசாலை பை, தேசிய உளவுச் சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன வழங்கிய தகவலுக்கு அமைய மீட்கப்பட்டதாகவும், குறித்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரினுடையது என நம்பத்தக்க ஜெகட், காற்சட்டை என்பன இருந்ததாகவும் ஷானி அபேசேகர கூறினார்.

இந்நிலையிலேயே, ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர், சி.ஐ.டி.விசாரணையில் அந்த இரட்டை கொலை சஹ்ரானினால் நெறிப்படுத்தப்பட்ட அடிப்படைவாத குழு முன்னெடுத்த குற்றச்செயல் என்பது சாட்சிகளுடன் வெளிப்படுத்தப்பட்டதாக ஷானி அபேசேகர கூறினார். இதன்போது ஷானி அபேசேகர சார்பில் ஆணைக்குழுவில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஷானி அபேசேகரவுக்கு விசாரணைக் கோவையை படிக்க போதிய கால அவகாசம் வழங்காமல் அவரிடம் விசாரணைத் தகவல்கள் குறித்து சாட்சியம் பெறுவதை ஆட்சேபித்தார்.

 இதன்போது ஷானி அபேசேகரவுக்கு நினைவில் உள்ளதை மட்டும் கூறுமாறும், அவசியம் ஏற்படின் விசாரணைக் கோவையை பார்த்து பதில் அளிக்கலாம் எனவும் ஆணைக் குழு அறிவித்தது.

  ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் கூட, சர்வதேச சதி, அமைப்புக்கள் தொடர்பில் சில தகவல்கள் எமக்கு கிடைத்தன. எனினும் நான் சி.ஐ.டி.யிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட காலப்பகுதி வரையில் அவற்றை உறுதி செய்ய சாட்சிகள் இருக்கவில்லை. தாக்குதல்களின் பின்னர் சர்வதேச விசாரணை அமைப்புக்கள், உளவுச் சேவைகளும் இங்கு வந்து விசாரணை நடாத்தின. அவர்களாலும் அவ்வாறானதொரு விடயத்தை உறுதி செய்ய முடியவில்லை.' என குறிப்பிட்டார்.

   இந்நிலையில் ஷானி அபேசேகரவுக்கு தலைவலி ஏற்படவே, சிறு இடைவேளை ஒன்று அவரால் கோரப்பட்டது. அதனை ஆராய்ந்த  ஆணைக்குழு, ஷானி அபேசேகரவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு  சாட்சியங்களை இன்று (26) பிற்பகல் 1.00 மணி வரை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.