(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்து கட்சி ஆதரவாளர்களை நடுத்தெருவில் விட்டிருக்கின்றது. அதன் பொறுப்பை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போதாவது ஏற்றுக்கொண்டு கட்சி தலைமையில் இருந்து உடனடியாக விலகவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் உப தலைவர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் வருமானப் பிரச்சினை அதிகரிப்பு - ரவி |  Virakesari.lk

வீழ்ச்சியடைந்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தோம். அதேபோன்று அதன் பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் படுதோல்வியடைந்து, கட்சி ஆதரவாளர்கள் எங்கு செல்வதென தெரியாமல் நடுத்தெருவில் விடப்பட்டிருக்கின்றனர். இதற்கான பொறுப்பை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போதாவது ஏற்றுக்கொண்டு தலைமைப்பதவியில் இருந்து விலகவேண்டும். 

அத்துடன் கட்சி தலைமையில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்காக கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் முன்னின்று செயற்பட்டு வருகின்றனர். கட்சிக்கு புதிய தலைமைத்துவத்தை வழங்கி,  பெரும் பலத்துடன் முன்னுக்கு கொண்டுசென்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதே பாதிக்கப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் நான் உட்பட முன்னாள் அமைச்சர்களான அர்ஜுன் ரணதுங்க மற்றும் நவீன் திஸாநாயக்க கட்சி பதவிகளில் இருந்து விலகினாலும் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகமாட்டோம். தனக்கு நினைத்த பிரகாரம் கட்சியின் யாப்பை மீறி பலவந்தமாக கட்சி தலைமை பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.