சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி திருநாளான நவம்பர் மாதம் நான்காம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'விஸ்வாசம்' என்ற விஸ்வரூப வெற்றியை வழங்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'அண்ணாத்த'. இந்தப் படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகைகள் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், சூரி, ஜோர்ஜ் மரியான், அர்ஜெய் ஆகியோருடன் பொலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ரி. இமான் இசை அமைக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் இப்படத்தின் வெளியீடு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு மே மாதத்திற்கு பிறகு தொடங்கும் என்பதால், படத்தின் வெளியீட்டை , இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தீபாவளி திருநாளான நவம்பர் மாதம் நான்காம் திகதியன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறது.

தீபாவளிக்கு எந்த நட்சத்திரத்தின் திரைப்படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும் முன்னரே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.