இந்திய தலைநகர் புது டெல்லியில் பல்லயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய பேரணி வன்முறையாக மாறியுள்ளது.

இதனால் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தடியடி தாக்குதல் என்பவற்றையும் பயன்படுதியுள்ளனர்.

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். 

11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62 ஆவது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

தற்போது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் டிராக்டர்களுடன் விவசாயிகள் நுழைந்துள்ளனர். சஞ்சய் காந்தி போக்குவரத்து நகருக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 

தற்போது மூன்று எல்லை பகுதிகளில் இருந்து காவல் தடுப்புகளை உடைத்து டெல்லி நோக்கி விவசாயிகளின் டிராக்டர் பேரணி படையெடுத்து செல்கின்றனர்.