இலங்கையில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்கள் உள்ளனர் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டி.ஆர்.சி.எஸ்.எல்) தெரிவித்துள்ளது.

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களில் 2.1 மில்லியன் பேர் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் ஓஷாதா சேனாநாயக்க இன்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் மயமாக்கலின் தேசிய உந்துதலில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்துவதாகவும் கூறிய அவர், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டின் முழுமையான டிஜிட்டல் மாற்றத்திற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து வருவதாகவும் கூறினார்.

இதற்கிடையில் பேஸ்புக் இன்று இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதனால் இலங்கை பேஸ்புக்கில் இரத்த தான அம்சத்தை பெற்ற 29 ஆவது நாடாக பதிவானது.

நாடு முழுவதும் இருபத்தி நான்கு இரத்த வங்கிகள் பேஸ்புக் சிறப்பு அம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

18-55 வயதுக்குட்பட்ட பேஸ்புக் பயனர்கள் அருகிலுள்ள இரத்த வங்கிகள் அல்லது மருத்துவமனைகளில் பதிவுசெய்து இரத்தத் தேவைகள் குறித்த புதுப்பிப்புகளைப் பெறலாம்.

இரத்த தானம் செய்ய அதிகமானவர்களை ஊக்குவிப்பதற்கும், இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் சிறப்பு பேஸ்புக் இரத்த தான அம்சம் தொடங்கப்பட்டுள்ளது.

இரத்தம் தேவைப்படுவோர்க்கு மட்டுமின்றி இரத்தம் வழங்குவோரை சுலபமாக தொடர்பு கொள்ள பேஸ்புக் டூல்கள் உதவியாய் இருக்கும்.