சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வந்த 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.

'இன்று நேற்று நாளை' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'அயலான்'.

அறிவியல் புனைகதை வடிவில் தயாராகியிருக்கும் இப்படத்தில் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் முன்னணி நட்சத்திர நடிகை ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலசரவணன், பானுப்பிரியா மற்றும் பொலிவுட் நடிகை இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கும் இந்த  திரைப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ் தயாரிக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா கட்டுப்பாடுகளுடன் தொடங்கி, அண்மையில் நிறைவு பெற்றிருக்கிறது.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் இருப்பதால் இந்த ஆண்டின் இறுதியில் இப்படம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்ற பிறகு, விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வந்த 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்திருப்பதால் அவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விரைவில் நடிக்கக் கூடும் என தெரியவருகிறது.