கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் இந் நடவடிக்கை நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அல்லது அது தொடர்பில் சந்தேகிக்கப்படும் உடல்களைக் கையாள்வதற்காக தகனத்தை திணிப்பது மனித உரிமை மீறலுக்கு சமம் என்றும் ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலோ அல்லது பிற நாடுகளிலோ கொரோனா கொரேனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது கொவிட் போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயத்திற்கு வழிவகும் என்று கூறப்படுவதற்கு நிறுவப்பட்ட மருத்துவ அல்லது அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் வெளியிடப்பட்ட நாட்டின் கொவிட்-19 வழிகாட்டுதல்களின்படி இலங்கை முழுவதும் கொவிட் சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் இறந்த உடல்கள் அனைத்தும் தகனம் செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.