(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக கடந்த 14 நாட்களுக்குள் 1,089 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றின் நிர்வாகப்பிரிவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

மேல்மாகாணத்தில் கடந்த 12 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதற்கமைய கடந்த 14 நாட்களுக்குள் 7,828 நிறுவனங்களை சுகாதார தரப்பினரும் பொலிஸாரும் இணைந்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.  இதன்போது 6,739 நிறுவனங்கள் உரிய சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடித்திருந்ததுடன் ,1,089 நிறுவனங்களில் சுகாதார ஒழுங்கு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 909 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் , அவற்றுள் 821 நிறுவனங்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைவாகவும் , 88 நிறுவனங்கள் சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு புறம்பாகவும் செயற்பட்டிருந்தன. அதற்கமைய இவ்வாறு சுகாதார சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள், முகாமையாளர்கள் உட்பட நிர்வாகப்பிரிவினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, மேல்மாகாணத்தை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் முகக்கவசம் அணியாமை தொடர்பில் இன்றுகாலை(26.01.2021) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் 2,770 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.