சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பத்து தொழிலாளர்களின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

சீனாவின் கடலோர சாண்டோங் மாகாணத்தில் தங்கம் உற்பத்தி செய்யும் முக்கிய பிராந்தியமான கிக்ஸியாவில் உள்ள ஹுஷான் சுரங்கத்தில் ஜனவரி 10 ஆம் திகதி இந்த வெடி விபத்து ஏற்பட்டது.

இதனால் சுமார் 600 மீட்டர் (2,000 அடி) நிலத்தடியில் பணிபுரியும் மொத்தம் 22 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இந் நிலையில் அவர்களுள் 10 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாண்டோங் மாகாணத்தில் உள்ள யந்தாய் நகர மேயர் சென் ஃபெய் திங்களன்று செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இவர்களுள் ஒரு தொழிலாளி தலையில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்திருந்தார்.

இதேவேளை விபத்தில் சிக்குண்ட மேலும் 11 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் சுரங்கத்தினுள் காணமல் போயுள்ளார். அவரை கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கையும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

மிகவும் மோசமான சுரங்க விபத்துக்கள் ஏற்படும் நாடுகளில் சீனாவும் ஒன்று. கடந்த ஆண்டு மாத்திரம் அங்கு ஏற்பட்ட சுரங்க விபத்துக்களில் மொத்தம் 573 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுரங்க பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.