இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆர் ஆர் ஆர் 'எனப்படும் 'ரணம் ரௌத்திரம் ரத்தம் ' திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படத்தை இயக்கி இந்திய இயக்குனர்களில் முன்னணி இடத்தை பிடித்த இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'ரணம் ரௌத்ரம் ரத்தம்'.

இந்த திரைப்படத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ஜூனியர் என்டிஆர், ராம் சரண், பொலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பொலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ஹொலிவுட் நடிகை அல்லிசன் டூடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசை அமைத்திருக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் டி வி வி தனய்யா தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை கற்பனை கலந்து உருவாகியிருக்கிறது.

படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் பேசுகையில்,' ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால், இந்த திரைப்படத்தை தசரா பண்டிகையின் விடுமுறை நாளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதியன்று இப்படம் உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. ' என்றார்.

'பாகுபலி' என்ற பிரம்மாண்டமான படைப்பின் மூலம் ரசிகர்களின் தனித்துவமான கவனத்தை கவர்ந்த இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலியின் படைப்பு என்பதால் 'ஆர் ஆர் ஆர்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.