சி.அ.யோதிலிங்கம்.

“குந்தூர் மலை ஆக்கிரமிப்பு போன்ற பௌத்த சிங்கள, விரிவாக்கத்தினை தடுப்பதற்கு தமிழ், முஸ்லிம், சர்வதேசம் தழுவிய குழுவொன்றை ஸ்தாபிப்பதோடு துறைசார்ந்த யாழ்ப்பாணம், கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினரையும் உள்ளீர்ப்பதே பொருத்தமானது. இந்த நடவடிக்கையில் தமதங்கள் ஏற்படுகின்றபோது, இருப்பு கேள்விக்குறியாகிவிடும்”

முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலை ஒன்றும் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. பௌத்தர் எவரும் வாழாத ஒரு இடத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலையில் இந்து மக்கள் காலம் காலமாக வழிபட்டுவந்த ஐயனார் சூலம் பிடுங்கி எறியப்பட்டுள்ளது. புத்தர் சிலை பிரதிஸ்டை செய்வதற்காக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேரடியாகவே விஜயம் செய்திருக்கின்றார். அவர் வருகைக்காக மலைக்குச் செல்லும் பாதை செப்பனிடப்பட்டதோடு நூற்றுக்கணக்கான காட்டு மரங்களும் வெட்டி வீசப்பட்டுள்ளன. 

புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்விற்கு செய்திகள் சேகரிப்புக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. சிங்கள ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். புதைபொருள் ஆய்வு என்பது ஆய்வுகளை மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொணர்வது. புத்தர் சிலை அங்கு ஏன் முளைக்க வேண்டும் என்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பிடம் எந்தப் பதிலுமில்லை. அகழ்வுப் பணிகள் வெளிப்படையானவை அவற்றை மூடிமறைத்து இரகசியமாகச் செய்ய வேண்டும் என்பதற்கும் எந்தப் பதிலும் இல்லை.

இது முழுக்க முழுக்க ஒரு இன அழிப்பு விவகாரமே. தாயகத் தொடர்ச்சியைச் சிதைப்பதே இதன் நோக்கமாகும். இந்த சிதைப்பு தாயகத்தின் மையமாக விளங்கும் திருக்கோணமலை மாவட்டத்தில் ஏற்கனவே செய்தாயிற்று தற்போது அடுத்த மையப்பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டம் இலக்குவைக்கப்பட்டுள்ளது. 

சிதைப்புக்கு ஒரு அணுகுமுறையல்ல பல்வேறு அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒருபக்கத்தில் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. மகாவலி நீர் ஒரு சொட்டுக்கூட வரவில்லை சிங்களக் குடியேற்றங்கள் மட்டும் பாரியளவில் வந்திருக்கின்றது. 

வவுனியா வடக்கில் நாமல் ராஜபக்ஷ தனது அடையாளத்தைப் பதிக்கும் வகையில் “நாமல்புர” என்ற கிராமத்தையே உருவாக்கியுள்ளார். வன பரிபாலனத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு, அனுராதபுரம் அரசாங்க செயலகம் அனைத்துமே ஆக்கிரமிப்புக் கருவிகளாக மாறியுள்ளன. தற்போது தொல்லியல் திணைக்களம் தனது ஆக்கிரமிப்புக்களை முடுக்கிவிட்டுள்ளது. தொல்லியல் விவகாரங்களுக்கான கிழக்குச் செயலணி தற்போது வடக்குவரை நீட்சிபெற்றுள்ளது போலத் தெரிகின்றது. 

கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான செயலணியின் பிரதான உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் குருந்தூர் மலையில் விகாரையே அமைந்திருந்தது என்றும் “குருந்தத்தா” என்ற நூலும் விகாரையில் வைத்தே எழுதப்பட்டது என்றும் கூறுகின்றார்.  இதற்கான ஓலைச்சுவடி சான்று இருக்கின்றது என்றும் கூறுகின்றார். 

மேலும் தண்ணி முறிப்புக்குளம் என்பது உண்மையான பெயர் அல்ல மஹிந்த வாவியே அதன் உண்மைப் பெயர் என்றும் கூறுகின்றார். பிற்காலத்தில் அங்குள்ள சிலர் விளக்கேற்றி இந்துக் கடவுளான சிவனை வழிபட்டனர் எனக் கூறப்பட்டாலும் ஆரம்பத்தில் அங்கு விகாரையே இருந்தது எனக் கூறுகின்றார். 

தொல்லியல் துறைப் புலமையாளர்களால் அவரது கூற்றுக்கள் நிரூபிக்கப்பட்டதா? என்றால் அவரிடம் பதில் இல்லை. அங்கு புராதன ஆதிசிவன் ஐயனார் ஆலயம் இருந்தது என்றும் தண்ணி முறிப்புக் கிராம மக்கள் காலம் காலமாக பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர் என்றும் கூறுகின்றனர். இக்குருந்தூர் மலை வன்னியை ஆட்சிசெய்த பண்டார வன்னியனின் ஒரு கோட்டையாக இருந்தது என்றும் ஒரு கதையுண்டு. தமிழ்த்தொல்லியல் ஆய்வாளர்கள் தான் இதுபற்றிய உண்மைகளைத் தேட வேண்டும். 

வடக்கில் பௌத்த மதத்திற்கான தொல்லியல் பிரதேசங்கள் இருக்கலாம். ஆனால் அவை சிங்கள பௌத்தத்திற்கான தொல்லியல் பிரதேசங்கள் என்ற தீர்மானத்திற்கு வரமுடியாது. இலங்கைத்தீவில் தமிழ் பௌத்தர்களும் இருந்திருக்கின்றனர். பல பௌத்த விகாரைகளின் தொல்லியல் எச்சங்கள் தமிழ்ப்பௌத்தர்கள் இருந்திருக்கின்றார்கள். என்பதை நிலைநிறுத்தியுள்ளன. 

திருகோணமலை கன்னியாவிற்கு அருகில் உள்ள வில்கம் விகாரை தமிழ் பௌத்தர்களுடைய விகாரையாகும். தமிழ்த் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இலங்கைத் தீவில் மேல்மண்ணில் ஆய்வுசெய்யும் போது பௌத்த சின்னங்கள் கிடைக்கலாம். ஆழமாகத் தோண்டி ஆய்வுசெய்தால் இந்துச் சின்னங்களே கிடைக்கும் எனக் கூறியிருக்கின்றார்.

குருந்தூர் மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்வினைகள் தமிழ்த் தரப்பிடமிருந்து வரத்தொடங்கியுள்ளன. துரதிஸ்டவசமாக அவை அறிக்கை மட்டத்திலும், பாராளுமன்ற உரை என்ற மட்டத்திலுமே இருக்கின்றன. இந்த அறிக்கைகள் உரைகள் கூட வலுவான தகவல்களையும், தர்க்கங்களையும் கொண்டதாக இல்லை. அரசியல் தலைவர்களிடமிருந்து வெறும் ஒப்பாரிகள் தான் வந்திருக்கின்றன. 

குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஆய்வாளர் ஒருவரை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்குரிய ஊதியத்தையும் அரசாங்கமே வழங்குகின்றது. அவருடைய கடமை பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுவதற்கு தேவையான தகவல்களை வழங்குவதே. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்பதவிகளுக்கு தங்களது சார்பு தரப்பினரை நியமித்து ஊதியங்களை வழங்குகின்றார்களே தவிர ஆய்வுப் பணிகள் எவற்றையும் செய்விப்பதில்லை. 

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குருந்தூர் மலை பற்றிய கருத்துக்களைத் தெரிவிக்க முன்னர் குருந்தூர் மலை பற்றிய வரலாற்றுத் தகவல்களை தேடி எடுத்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புப் பற்றிய தகவல்களையும் எடுத்திருக்க வேண்டும். இரண்டையும் இணைத்து கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். இந்தப் பொறுப்புணர்வு எந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தும் இருக்கவில்லை.

உண்மையில் இந்த ஆக்கிரமிப்பு பல பரிமாணங்களைக் கொண்டது. அதில் முதலாவது இதுவொரு இன அழிப்பு நடவடிக்கையாகும். ஒரு இனத்தை தாங்கும் தூண்களை அழிப்பதும் இன அழிப்புத்தான். நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பனவையே அத்தூண்களாகும். குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு ஒரு கலாசார அழிப்பாகும். அதேவேளை தமிழ் நிலம் பறிப்பு என்ற வகையில் இது ஒரு நிலப்பறிப்புமாகும். 1933ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிக்கை இதனை தமிழர் பகுதி என்று உறுதிப்படுத்துகின்றது. 

இரண்டாவது இது ஒரு நீதிமன்ற அவமதிப்பு செயன்முறையாகும். ஏற்கனவே புத்தர் சிலை அமைக்க முயற்சித்தபோது நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தடை உத்தரவு மீறப்பட்டுள்ளது. அதனைச் சுட்டிக்காட்டுகின்றபோது, தொல்பொருள் ஆராய்ச்சி செய்யவே வந்தோம் என்று கூறுகின்றனர். தொல்பொருள் ஆராய்சி என்றால் புத்தர் சிலை அமைக்கப்பட வேண்டுமா? ஐயனார் சூலத்தை பிடுங்கி எறிய வேண்டுமா? ஏற்கனவே நீதிமன்ற பிரதேச மக்கள் அங்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியிருந்தது. அந்த உரிமை தற்போது மறுக்கப்படுகிறது.

அதேநேரம் இன்னொரு விடயமும் உள்ளது. ஒருவேளை ஆக்கிரமிப்பாளர்கள் குறிப்பிடுவது போன்று இது தொல்லியத்துறையினால் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறினாலும் அதற்கு யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். 

ஆனால் இங்கு யாழ்.பல்கலைக்கழத்தினைச் சேர்ந்தவர்களுக்கு பதிலாக முல்லைத்தீவு முகாம்களில் உள்ள இராணுவத்தினரே இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே அந்த அடிப்படையிலும் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டே உள்ளது. 

மூன்றாவது இங்கு இடம் பெறும் தொல்லியல் ஆய்வுகள் முறையானதல்ல. உண்மைகளை தேடுதல் இங்கு இடம் பெறுவதில்லை. மாறாக ஏற்கனவே தாங்கள் தீர்மானித்த விடயத்திற்கான ஆதாரங்களை போலியாக உருவாக்குவதே இடம் பெறுகின்றது. அந்த தீர்மானித்த விடயம் என்பது இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என்பது தான். 

அதற்கான ஆதாரங்களை போலியாக உருவாக்குவதற்குத் தான் இந்த அகழ்வுப் பணிகள் இடம் பெறுகின்றன. உதாரணமாக கிழக்கு மாகாணத்திற்கென உருவாக்கப்பட்ட தொல்லியல் செயலணியில் பௌத்த பிக்குகள் உள்வாங்கப்பட்டுள்ளனர் அவர்கள் தொல்லியல் அறிஞர்கள் அல்லர் தவிர தமிழ், முஸ்லிம் புலமையாளர்கள் எவரும் இணைக்கப்படவில்லை. 

வடக்கு-கிழக்கில் யாழ்.பல்கலைக் கழகம், கிழக்குப்பல்கலைக் கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்று மூன்று பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் மாணவர்கள் இணைக்கப்படாமல் பேராதனை, கொழும்பு போன்ற தென்னிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களே இணைக்கப்படுகின்றனர். இதைவிட சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொல்லியல் ஆய்வு முறைகளும் இங்கு பின்பற்றப்படுவதில்லை. 

இந்த விடயங்களையெல்லாம் தமிழ்த்தரப்பு அம்பலப்படுத்த முன்வர வேண்டும். துரதிஸ்டவசமாக தமிழ்த்தரப்பிலிருந்து இவ்விடயங்கள் தொடர்பாக ஒழுங்கு படுத்தப்பட்ட முயற்சிகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் அரசியல் கட்சிகள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி தெரியாது உறைந்துபோய் இருக்கின்றன. 

சிவில் அமைப்புக்கள் தமிழ் சூழலில் மிகவும் பலவீனமாகவே உள்ளன. சரியான அரசியல் தலைமை இல்லாமல் வலுவான சிவில் அமைப்புக்களையும் எதிர் பார்க்க முடியாது. குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு தொடர்பாக சிறிய அடையாளப் போராட்டம் கூட இன்னமும் நடாத்தப்படவில்லை.

இவ்விவகாரம் தமிழ் மக்களின் இருப்புடன் தொடர்புடைய விவகாரம் இவ்வாக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தா விட்டால் தமிழினம் அழிந்து போவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும். ஒரு சர்வதேசம் தழுவிய வேலைத்திட்டம் இதற்குத் தேவை. தற்போதைய அரசாங்கம் சர்வதேச அரசியல் போராட்டம் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணிந்தமையை யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பு விவகாரத்தில்; தெளிவாகவே பார்க்க முடிந்தது. எனவே தமிழ் மக்கள் சர்வதேச ரீதியான அழுத்தமளிக்கும் அரசியல் போராட்டத்திற்கு தயாராக வேண்டும். 

இது விடயத்தில் பல வேலைத்திட்டங்களை படிப்படியாக ஆரம்பிப்பது ஆரோக்கியமானது. அதில் முதலாவது இந்த விவகாரத்தை கையாள்வதற்கென தமிழ் முஸ்லிம் இணைந்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அரசாங்கத்தின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் தமிழ் மக்களினது இருப்பை மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் இருப்பையும் கடுமையாகப் பாதிக்கின்றது. 

முஸ்லிம் மக்கள் தற்போது அதனை உணரத் தொடங்கியுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு எதிரான ஹர்த்தால் போராட்டத்தில் அவர்களும் பங்குபற்றி முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தனர். அந்த ஆதரவை தொடர்ந்தும் வளர்த்தெடுக்க வேண்டும்.

இந்த அமைப்பில் தமிழ், முஸ்லிம் புலமையாளர்கள் , யாழ்,கிழக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தவர்கள் , புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் வரலாறு , தொல்லியல் புலமையாளர்கள் , தமிழக புலமையாளர்கள் என்போரை இணைத்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்களின் உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை இது விடயத்தில் கவனத்தில் எடுப்பது ஆரோக்கியமாக இருக்கும்.

இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பானது பாரபட்சமின்றி அரசாங்கத்திடம் பின்வரும் கோரிக்கைகளை அச்சமின்றி முன்வைக்க வேண்டும். 

1. வட கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது தமிழ், முஸ்லிம் புலமையாளர்களையும் யாழ்ப்பாண, கிழக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

2. தொல்லியல் ஆய்வு விவகாரத்தில் இன அழிப்பு நோக்கம் அரசிற்கு இருப்பதால் சர்வதேச ஆய்வாளர்கள், தமிழ்நாட்டு ஆய்வாளர்களையும் ஆய்வுப்பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தேர்ச்சிபெற்ற  புலமையாளர்கள் பலர் இப்பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். 

3. தொல்லியல் பிரதேசங்களை முகாமை செய்யும் போது தமிழ் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அதில் இணைக்கப்படல் வேண்டும். 

தொல்லியல் ஆய்வுகளை கண்காணிக்கும் விவகாரத்தில் ஐ.நா. கண்காணிப்பாளர் ஒருவரையும் இணைத்துக்கொள்ள வேண்டும் அவர் இன, மத, பாகுபாடு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வார். சர்வதேச தரம் வாய்ந்த ஆய்வு இடம் பெறுகின்றதா? என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வார். 

அதேவேளை இந்த அமைப்பும் ஆய்வுத்திட்டத்தை உருவாக்கி செயற்படுத்த முன்வர வேண்டும். வட – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களையும் இதில் இணைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே பேராசிரியர் இந்திரபாலா இதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார். ஆனைக்கோட்டை ஆய்வு அவர் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது. 

மறுபக்கத்தில் அரசியல் தலைமைகள் இவ்வாக்கிரமிப்பு தொடர்பாக உலகலாவிய அரசியல் போராட்டத்தை நடாத்த முன்வர வேண்டும். ஆக்கிரமிப்பு விவகாரத்தை இலங்கைத்தீவுக்கு வெளியில் கொண்டு செல்லாமல் இதற்கான தீர்வைக் காண்பது கடினமானது. மொத்தத்தில் தமிழ்த்தேசிய சக்திகளுக்கு இது விடயத்தில் நிறையவே பணிகள் காத்திருக்கின்றன.