(செ.தேன்மொழி)

காலியில் உள்ள கடலில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று திங்கட்கிழமை காலை நீராடச் சென்ற 17 வயதுடைய ஹெகொட சுமன எனப்படும் பிக்கு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலகொட விகாரையின் இளம் பிக்குவான இவர் , பத்தேகம கிரிபதாவில அமரவங்ச பிரிவெனாவில் கல்விப்பயின்று வந்துள்ள நிலையிலே இன்று இவ்வாறு கடலில் நீராடச் சென்றுள்ளார். 

அவருடன் மேலும் மூன்று பிக்குகள் நீராடச் சென்றுள்ளதுடன் , உயிரிழந்த பிக்கு நீராடிக்கொண்டே பந்தொன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

பந்து காற்றில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , குறித்த பிக்கு அதனை கைப்பற்றுவதற்காக பந்தின் பின்னால் நீச்சலிட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்தே அவர் நீரில்மூழ்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடற்படையின் சுழியோடிகளும் , பிரதேச வாசிகளும் இணைந்து இன்று மாலை வேளையில் பிக்குவின் சடலத்தை மீட்டிருந்தனர். பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடபில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.