இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்று வெற்றி கொண்டுள்ளது.

இன்று (25.01.2021) காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்துடன் இலங்கை அணியை 6 விக்கெட்களினால் தோற்கடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணிக்கு 164 ஓட்டங்களை வெற்றியிலக்காக இலங்கை அணி நிர்ணயித்திருந்தது.

இதன்படி, ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 164 ஓட்டங்களை பெற்று வெற்றியை தம்மவசப்படுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் டொம் சிப்லி  ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை மண்ணில் வைத்து இலங்கை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 6 ஆவது முறையாக இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்ட வெற்றி இதுவாகும்.