அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதி டெல்ருக்சனின் 4 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை நினைவு கூர்ந்தும் சிறைகளில் விடுதலைக்காக போராடிவரும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இப் போராட்டங்கள், இன்று திங்கட்கிழமை கொழும்பில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாகவும் யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் நடைபெற்று வருகின்றன.

ஆட்சி மாற்றத்தின் பின்பாக பல தடவைகள் அரசியல் கைதிகள் தமது விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டத்தினை நடத்தியுள்ளனர். 

எனினும் அப் போராட்டங்களுக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்து வருகின்றது. 

இவ்வாறானதோர் சூழ்நிலையில் அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றியும் விடுவிக்கக் கோரி, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

 

அதனடிப்படையில், கடந்த ஆட்சியில் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட டெல்ருக்சனும் விடுதலைக்காக ஏங்கிய தருணத்திலேயே ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்.

 அவ்வாறாக சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்ட டெல்ருக்சன் மற்றும் நிமலரூபன் போன்றோரின் படுகொலைக்கு இன்றும் கூட நீதி கிட்டவில்லை. 

இந் நிலையில் இவ்வாறான சிறைச்சாலைப்படுகொலைகளின் விசாரணைகளைத் துரிதப் படுத்தக் கோரியும் அப் படுகொலைகளுக்கு நீதியைக் கோரியும் தற்போதும் விடுதலைக்காக தவிக்கும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்யக் கோரியுமே குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சிறையில் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் படுகொலை செய்யப்பட்ட டெல்ருக்சனின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.