(எம்.மனோசித்ரா)
69 இலட்சம் மக்களுக்கு இந்த அரசாங்கம் துரோகியாகியுள்ளது. இவ்வாறு துரோகத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கதவு திறந்தேயிருக்கிறது. அவர்களை வந்து எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தொம்பே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  மக்கள் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நினைத்தும் பார்க்க முடியாதளவிற்கு பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமை நீங்கிக் கொண்டிருக்கிறது. விற்க மாட்டோம் எனக் கூறியவர்களே தற்போது வேகமாக விற்று கொண்டிருக்கிறார்கள்.

தேசிய சொத்துக்கள், தேசிய நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த நாள் முதல் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டன. எதனையும் விற்க மாட்டோம் என்று கூறியவர்கள் வரலாற்றில் மிக வேகமாக எல்லையின்றி தேசிய சொத்துக்களை விற்று கொண்டிருக்கிறார்கள். 

நாம் எந்தவொரு வகையிலும் தேசிய சொத்துக்களை விற்க தயாராகயில்லை. எனினும் எமது நாட்டிலுள்ள வளங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க தயாராகவுள்ளோம். வெளிநாட்டு முதலீட்டின் ஊடாக கிடைக்கப் பெறும் டொலர் வருமானத்தை நாட்டு மக்களின் நன்மைக்காக பயன்படுத்துவோம். மக்களின் உரிமைகளுக்காக முன்னிற்கும் வீரன் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும் என்றார்.