வெளிச்சத்துக்கு வரும் இராணுவ உதவிகள்

25 Jan, 2021 | 03:22 PM
image

-ஹரிகரன்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பும் உறவுகளும் மிக நெருக்கமானவையாக இருந்த போதும், அவை பற்றிய முழுமையான தகவல்கள் பெரும்பாலும் வெளியிடப்படுவது குறைவு.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, இந்தியா அளித்த உதவிகளும், ஒத்துழைப்புகளும் அதிகமாக இருந்த போதும், பாகிஸ்தானும் சீனாவும் அளித்த இராணுவ உதவிகள் தான் முன்னுரிமைப்படுத்தப்பட்டன, முக்கியத்துவப்படுத்தப்பட்டன.

இந்தியா அப்போது இராணுவ உதவிகள் தொடர்பான விடயங்களில் அதிகம் விளம்பரம் தேடிக் கொள்ள விரும்பாமை அல்லது முடியாமையும் அதற்கு ஒரு காரணம்.

இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததால், அந்த நெருக்கடிகளைத் தவிர்க்க இந்திய அரசு அடக்கி வாசிக்க வேண்டியிருந்தது.

அதனால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா அளித்த ஆயுதங்கள் தளபாடங்கள் குறித்த பல ஒத்துழைப்புகள் உதவிகள் பெரும்பாலும் தெரியப்படுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும், 2007ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் வான்வழித் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்த பின்னர், இந்திரா ரக (INDRA Mk-II 2D radar) ராடர்களையும்,  L3 ரக 40 மி.மீ விமான எதிர்ப்பு பீரங்கிகளையும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் இலங்கைக்கு இந்தியா கொடுத்தது.  

2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், விடுதலைப் புலிகள், வவுனியா விமானப்படைத் தளம் மீது ஒரு கொமாண்டோ பாணியிலான தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இந்தியா வழங்கிய ராடர் நிலையத்தை அழிப்பது தான் அந்த தாக்குதலின் முக்கியமான இலக்கு. 

அந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றவில்லை.

அந்த தாக்குதலின் போது இந்திய விமானப்படையைச் சேர்ந்த ராடர் பராமரிப்பு நிலைய அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்திருந்தார்.

இவ்வாறான சில சம்பவங்களினால் இந்தியாவின் பங்களிப்பு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தாலும், அவை முழுமையானவையாக இருக்கவில்லை.

இலங்கை விமானப்படைக்கும், இலங்கை கடற்படைக்கும் இந்தியா கணிசமான உதவிகள், ஒத்துழைப்புகளை வழங்கி வந்திருக்கிறது. இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு வகையில், இலங்கையை சீனா அல்லது பாகிஸ்தானின் பக்கம் சென்று விடாமல் தடுப்பதற்கான ஒரு உத்தியாகவும் கருதலாம்.

எவ்வாறாயினும், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பின் கனதியை, வெளிப்படுத்துவதில் இந்தியா இப்போது, ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

அதற்கு உதாரணமாக, அண்மையில் நடந்த ஒரு விடயத்தை சுட்டிக்காட்டலாம்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கொழும்பு பயணத்துக்குப் பின்னர், கடந்த 10 ஆம் திகதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில், இந்திய விமானப்படையின் அன்ரனோவ் 32 வகை போக்குவரத்து விமானம் ஒன்று வந்திறங்கியது.

அந்த விமானத்தில் இருந்து பெட்டி பெட்டியாக பொருட்கள் இறக்கப்பட்ட தகவல், அரசல் புரசலாக கசிந்திருந்த போதும், ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தவில்லை.

அமெரிக்க விமானப்படையின் விமானங்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் நடைமுறையை மேற்கொண்ட போது, சர்ச்சைக்குரிய வகையில் அதனை வெளிப்படுத்தியது போல, இந்த விடயத்தில் ஊடகங்கள் செயற்படவில்லை.

இந்த விமானம் வந்திறங்கி ஒரு வாரம் கழித்து, இந்திய தூதரகத்தினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், இந்தியாவின் முன்னுரிமைக்குரிய ஒரு பங்காளன் என்ற அடிப்படையில், இலங்கைக்கு அளிக்கப்பட்ட இராணுவ உதவிகள் தொடர்பான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை விமானத்தில் சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான, இந்திரா ரக ராடர்களுக்கான 341 உதிரிப்பாகங்கள் கொண்டு வந்து கொடுக்கப்பட்டதாக  அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இலங்கை விமானப்படைக்கு இந்தியா நான்கு இந்திரா (INDRA Mk-II) ராடர்களை கொடையாக வழங்கியிருக்கிறது. 

ட்ரக் வண்டியுடன் இணைக்கப்பட்ட நகரக் கூடிய இந்த ராடர்கள், இரு பரிமாண தரவுகளை வழங்கக் கூடியவை. 

90 கி.மீ சுற்று வட்டத்துக்குள் வரும் சிறிய ரக விமானங்களை இலகுவாக அடையாளம் காணக் கூடியவை. 35 மீற்றருக்கும் 3000 மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்தில் பறக்கும் விமானங்களை நன்றாக இனங்காணக் கூடியவை.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தல் இருந்தபோது, அதனை எதிர்கொள்வதற்கு, இலங்கை விமானப்படை முப்பரிமாண ராடர்களையே தருமாற இந்தியாவிடம் கேட்டது. 

ஏனென்றால், முப்பரிமாண ராடர்கள் தான், விமானத்தின் வேகம், திசை ஆகியவற்றுடன், அதன் உயரத்தையும் காண்பிக்கும். அவற்றை வழங்க இந்தியா மறுத்து விட்டது.

இதனால் சீனாவிடம் YLC-18 3D  ரக, முப்பரிமாண ராடர்கள்கள் இரண்டை அரசாங்கம் வாங்கியது. அமெரிக்காவிடமும் இவ்வாறான ராடர்களை வாங்குவதற்கு அரசாங்கம் அணுகிய போதும், அது வெற்றியளிக்கவில்லை.

இலங்கைக்கு கொடுக்கப்பட்ட ராடர்களை இந்தியா தொடர்ந்து பராமரித்து வருகிறது. இதில் ஒரு பாதுகாப்பு நலன் இந்தியாவுக்கு உள்ளது.

இந்தியா இதனைத் தொடர்ந்து பராமரிக்கத் தவறினால், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, சீனா தனது ராடர்களைக் கொடுத்து விடக்கூடிய ஆபத்து உள்ளது.

இதனால் ராடர்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் போது, அவற்றைத் திருத்திக் கொடுப்பதுடன், அவற்றுக்கான உதிரிப்பாகங்களையும், கொடுத்து வருகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட பெட்டிகளில் 54 விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருந்தன.

தோளில் இருந்து ஏவக் கூடிய, இக்லா (IGLA) ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தல் இருந்தபோது, 2007இல், 54 இக்லா ஏவுகணைகளை இலங்கை விமானப்படைக்கு இந்தியா கொடுத்தது.

இதிலும் ஒரு உள்நோக்கம் இருந்தது. இந்த ஏவுகணைகளை கொடுக்கத் தவறினால், சீனாவிடம் இருந்து இதனை வலுவான ஏவுகணைகளை பெற்றுக் கொள்ளும், ஆபத்து இருந்தது.

அந்த 54 ஏவுகணைகளையும் இலங்கை விமானப்படை இப்போதும் கையில் வைத்திருக்கிறது.

இந்த ஏவுகணைகளை இந்தியாவே ஆண்டுதோறும் ஆற்றல் சோதனைக்குட்படுத்தி, தேவையான மறுசீரமைப்புகளைச் செய்து ஆயுள் நீடிப்பு செய்து கொடுத்து வருகிறது.

இந்த தகவல் இப்போது தான் முதல்முறையாக வெளிவந்திருக்கிறது- அதுவும் இந்தியாவின் வாயில் இருந்து வந்திருக்கிறது.

இந்த ஏவுகணைகளை விமானத்தில் ஏற்றிச் சென்று, அவற்றை பரிசோதனைக்குட்படுத்தி, பராமரிப்பதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் அனைத்துச் செலவுகளையும் இந்தியாவே ஏற்றுக் கொள்கிறது.

இதனை ஆண்டுதோறும் செய்து வரும் இந்தியா, இப்போது தான் அதனை வெளிப்படுத்தியிருக்கிறது.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டதற்கு காரணம் உள்ளது.

இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுவாகப் பேணுவதற்கு, இந்தியா விரும்புகிறது. 

இந்த இடத்தில் தவறிழைக்கப்பட்டால், சீனா, பாகிஸ்தானின் பக்கம், இலங்கை சாருவதை தடுக்க முடியாமல் போய் விடும் என்ற கருகிறது.

அண்மையில், கொழும்பு வந்திருந்த தேசிய பாதுகாப்பு ஆலேசகர் அஜித் டோவலுடனான பேச்சுக்களிலும், இது உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைச் சார்ந்தே, இந்தியா தொடர் பாதுகாப்பு உதவிகளை அளித்து வருகிறது.

இன்னொரு விடயமும் இதற்குப் பின்னால் உள்ளது.

இலங்கையின் இறைமை, சுதந்திரத்தில் இந்தியா தலையிடுகிறது என்ற சந்தேக உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்தியாவினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சம், சிங்கள பௌத்த தேசியவாதிகள் மட்டத்தில் பரவலாகவே காணப்படுகிறது.

இந்த அச்சம் களையப்பட வேண்டியது முக்கியமானது என இந்தியா கருதுகிறது.

இவ்வாறான நிலை நீடிப்பது, சீனாவுக்கு வசதியானதாகவும், இந்தியாவின் நலனுக்கு எதிரானதாகவும் இருக்கும்.

எனவே, இலங்கைக்கான இராணுவ உதவிகளை இந்தியா வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.

அதற்குத் தேவையான பிரபல்யத்தை இந்த கொடையின் மூலம் இந்தியா தேடிக்கொள்ள முயன்றிருக்கிறது.

ஒரு காலத்தில் ஒளித்து ஒளித்து செய்த உதவிகளை இந்தியா வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கியிருக்கிறது.

இது பிராந்திய பாதுகாப்பு சார்ந்த உறவுகளில் இந்தியாவின் புதிய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22