(ஆர்.ராம்)
யாழ்.நயினாதீவு, நெடுந்தீவு, மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy Grid) அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளதன் ஊடாக தென்னிந்தியாவை சீனா மிகவும் நெருங்கி வந்துள்ளது என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் இந்த நகர்வினை கட்டுப்படுத்துவதற்கு தமிழர்கள் அதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்றும் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் உடனடியான கரிசனையைக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கமானது கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தும் மின்சார வழங்கல் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா நிறுவனத்திற்கு தீவுப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. 

இந்த திட்டத்திற்காக இந்திய நிறுவனங்கள் சிலவும் கேள்விமனுக்களை சமர்ப்பித்திருந்தபோதும் அவை நிராகரிக்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விதமான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

முழு இலங்கையையும்  இந்தியா தனது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ள பகுதியாகவே பார்க்கின்றது. அதிலும் குறிப்பாக, வடகிழக்கு பிரதேசங்களை தனது தென்பகுதிக்கு மிக நெருங்கியவையாக இருப்பதால் அதில் அதிக கவனத்தினையும் கொண்டிருக்கின்றது. மேலும் வடமாகாணத்தின் மன்னார், வடமராட்சி மற்றும் தீவிகப்பகுதிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கேந்திர ஸ்தானங்களாகவே உள்ளன. 

இவ்வாறான நிலையில் வடமாகாணத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளை அனுமதிக்காதே நிலைமைகளே இதுவரை காலமும் இருந்து வந்தது. கடந்த கால இலங்கை அரசாங்கங்களும் அவ்விதமான தீர்மானங்களையே எடுத்து வந்திருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் திடீரென தீவகப்பகுதிகளில் சீனா கால்பதிப்பதற்கு இடமளித்திருக்கின்றது. இந்த செயற்பாடானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. 

குறிப்பாக தீவகத்தில் சீனாவுக்கு இடமளிப்பதன் ஊடாக இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்வதற்கு அல்லது கிழக்கு முனைய விடயம் உள்ளிட்டவற்றில் அழுத்தங்களை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக கையிலெடுக்க இலங்கை அரசாங்கம் விளைகின்றதா என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது. 

அதேநேரம், வடக்கு மாகாணத்தில் இருநாடுகளுக்கு இடையிலான வல்லாதிக்கப்போட்டியை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. 

இதனை விடவும், சாவகச்சேரிப்பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றின் பெயரால் சீன பிரஜைகள் வந்து தங்கியுள்ளார்கள். அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருக்கின்றார்கள். அவர்கள் என்ன தேவைக்காக அங்கிருக்கின்றார்கள். எவ்விதமாக செயற்படுகின்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதும் இருப்பதாக இல்லை. 

இலங்கை அரசாங்கத்தின் இவ்விதமான எதேச்சதிகாரச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இயலாதவர்களாகவே தமிழர்கள் இருக்கின்றார்கள். ஏனென்றால் தற்போது மாகாண சபைகள் இயங்காத நிலையில் இருக்கின்றன. அவ்வாறு அவை செயற்பட்டாலும் இவ்விதமான விடயங்களை கட்டுப்படுத்தவல்ல காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்காது மத்திய அரசாங்கம் இருந்து வருகின்றது. 

டெல்லியில் உள்ள மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையான கரிசனை கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழர்களுக்காக முழுமையான அதிகாரப்பகிர்விலேயே இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் தங்கியுள்ளது என்பதை சீனாவின் வடக்கை நோக்கிய நகர்வு குறித்து நிற்கின்றது என்றார்.