இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.

இதனால் இங்கிலாந்தின் வெற்றிக்கு 164 ஓட்டங்கள் மாத்திரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது தனது முதல் இன்னிங்சுக்காக 381 ஓட்டங்களை குவித்தது. 

அதன் பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியானது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 339 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க இங்கிலாந்து அணிக்கு மேலதிகமாக ஐந்து ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சுக்கா 116.1 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 344 ஓட்டங்கள‍ை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் அதிகபடியாக 186 ஓட்டங்களை பெற, பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய 137 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் 42 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுகளில் திக்குமுக்காடி 35.5 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

லசித் எம்புல்தெனிய மாத்திரம் 42 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 40 ஓட்டங்களை அணி சார்பில் அதிகபடியாக பெற்றார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டாம் பேஸ் மற்றும் ஜாக் லீச் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் இரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இலங்கை அணியின் இந்த ஓட்ட எடுப்பினால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக 164 ஓட்டங்கள் மாத்திரம் நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றியிலக்கினை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து சற்று முன்னர் வரை 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ஓட்டங்களை பெற்றுள்ளது.