தேசிய பொது விரைவுத் தகவல் குறியீட்டுக் கொடுப்பனவை ஊக்குவிக்க மத்திய வங்கியுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படும் சம்பத் வங்கி

By J.G.Stephan

25 Jan, 2021 | 01:54 PM
image

தேசிய பொது விரைவுத் தகவல் (QR) குறியீட்டுக் கொடுப்பனவுகளை ஊக்குவிக்க சம்பத் வங்கி தொடர்ந்தும் மத்திய வங்கியுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றது

கொழும்பு, ஜனவரி 24, 2021: 2020 ஆம் ஆண்டில் நாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தேசிய பொது விரைவுத் தகவல் (QR) குறியீடான LANKAQR தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல், அதனை ஏற்றுக்கொள்வது மற்றும் பாவனையை மேம்படுத்தல் ஆகியன தொடர்பில் சம்பத் வங்கி மீண்டும் ஒரு முறை இலங்கை மத்திய வங்கியுடன் கைகோர்த்துள்ளது.

நுகர்வோர் தமது நாளாந்த கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளின்போது LANKAQR இன் பாவனையை முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 2021 ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் காலிமுகத்திடலுக்கு அருகாமையில், பாலதக்ஷ மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பின் சமீபத்தைய வெளிப்புற உணவக அமைவிடங்களில் ஒன்றான Dining Capsule இல் 2-நாள் ஊக்குவிப்பு முன்னெடுப்பு செயல்பாட்டை சம்பத் வங்கி மேற்கொண்டுள்ளது.

இந்த முயற்சி தொடர்பான ஆரம்ப வைபவத்தில் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகளுக்கான பணிப்பாளரான தர்மசிறி குமாரதுங்க, சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரான நந்த பெர்னாண்டோ, சம்பத் வங்கியின் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியும், குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியுமான தாரக ரண்வல மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் சமூகமளித்திருந்தனர்.

மேற்குறிப்பிட்ட ஊக்குவிப்பு செயல்பாடு முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில், Dining Capsule தொகுதியிலுள்ள Dunhinda Colombo, Roots, Grand Monarch, Street Wok, Lavinia, Spice Junction, Giovanni’s Pizza al Taglio மற்றும் BoxBar ஆகிய உணவகங்களில் LANKAQR வசதி கொண்ட Sampath WePay டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு 25ம% பணமீளளிப்பு சலுகையையும் வங்கி வழங்கியுள்ளது.

“தொழில்நுட்பமானது மகத்தான சௌகரியம் மற்றும் பாதுகாப்பினை எமக்கு வழங்கியவாறு, நாம் எமது நாளாந்த கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வழிமுறையை தொடர்ந்தும் மாற்றி வருகின்றது. நுகர்வோர் மற்றும் வணிக ஸ்தாபனங்கள் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமைகளை தீவிரமாக உள்வாங்கி வருவதால் இந்த நிதர்சனம் இலங்கையிலும் அதிகரித்துச் செல்லும் போக்குக் காணப்படுகின்றது.” என்று சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரான நந்த பெர்னாண்டோ அவர்கள் குறிப்பிட்டார்.

“வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் அனுகூலத்தை சிறப்பாகப் பயன்படுத்தி, நாடெங்கிலுமுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பெறுமதியை வழங்கும் வகையில் உரிய திPர்வுகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் சம்பத் வங்கி எப்போதும் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவாக, LANKAQR பயன்பாட்டை உள்வாங்கும் முயற்சியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல இலங்கை மத்திய வங்கியுடன் கூட்டுச் சேர்வது எமக்கு பெருமகிழ்ச்சி அளிக்கின்றது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“இலங்கை எங்கிலும் LANKAQR  கட்டமைப்பினை உள்வாங்கும் வணிகர்கள் மற்றும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், QR அடிப்படையிலான கொடுப்பனவுகள் மூலம் கிடைக்கும் நன்மைகளை அவர்கள் போற்ற ஆரம்பித்துள்ளனர்.

நொடிப்பொழுதில் எந்தவொரு வங்கியிலிருந்தும் இணையக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுடன் அனைத்து வகையான நிதியியல் கருவிகளையும் ஒருங்கே கொண்டிருக்க பயனர்களுக்கு இடமளிக்கின்ற வகையில் சம்பத் வங்கியிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பான, அனைத்தையும் ஒருங்கே உள்ளடக்கும் டிஜிட்டல் பணப்பையான Sampath WePay  மகத்தான அளவில் பிரபலமடைந்து வருவதை நாம் கண்ணுற்றுள்ளோம். Sampath WePay  போன்ற LANKAQR வசதி கொண்ட கொடுப்பனவுத் தீர்வுகள் வழங்கும் சௌகரியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக இதில் இணைந்து கொள்ள முன்வருமாறு சம்பத் வங்கி மற்றும் ஏனைய வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்,” என்று சம்பத் வங்கியின் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியும், குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியுமான தாரக ரண்வல அவர்கள் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் இலங்கை மத்திய வங்கியால் முன்னெடுக்கப்படும் LANKAQR  ஊக்குவிப்பின் ஒரு அங்கமாக, ஜனவரி 23 அன்று தியத உயனவில் இடம்பெற்ற மத்திய வங்கியின் LANKAQR  கொழும்பு முன்னெடுப்பிலும் சம்பத் வங்கி பங்குபற்றியிருந்தது. இந்நிகழ்வில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரான கௌரவ அஜித் நிவார்ட் கப்ரால் அவர்கள் பிரதம அதிதியாகவும், இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுனரும், தேசிய கொடுப்பனவுச் சபையின் தவிசாளருமான இவெட் பெர்னாண்டோ அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன், இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகளுக்கான பணிப்பாளரான தர்மசிறி குமாரதுங்க மற்றும் தொழிற்துறையின் ஏனைய பல சிரேஷ்ட அதிகாரிகளும் நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.

பண வடிவிலான புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை மேற்கொள்ளும் சமூகத்தை தோற்றுவிப்பதற்கான இலங்கை மத்திய வங்கியின் நோக்கத்திற்கு அமைவாக தேசிய பொது விரைவுத் தகவல் குறியீட்டை (QR) உள்வாங்கிக் கொள்வதை வணிகர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற விசேட வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள், தொலைதொடர்பாடல் பங்காளர்கள் மற்றும் நிதியியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் கைகோர்த்துள்ளன.

அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற பணமின்றிய கொடுப்பனவு முறைமையை உள்வாங்கிக் கொள்ளுமாறு தனது வணிகப் பங்காளர் நிறுவனங்களை சம்பத் வங்கி தீவிரமாக ஊக்குவித்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியால் இது தொடர்பில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட தினத்தன்று கொழும்பைச் சூழவுள்ள தனது பல்வேறு கிளைகளைத் திறந்து வைத்திருந்த வங்கி, LANKAQR தொடர்பில் நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தனது வணிகப் பங்காளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

100% உள்நாட்டு வங்கியாகத் திகழ்ந்து வரும் சம்பத் வங்கியானது இலங்கை மக்களின் வாழ்வில் ஆழமாக வேரூன்றியுள்ளது. 1987 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த வங்கி ஒரு அதிநவீன நிதி நிறுவனமாக மாறியுள்ளதுடன், அதன் தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் வணிகத்தில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் பலனாக இன்றும் சந்தையில் முன்னிலை வகிக்கும் வங்கியாக தொடர்ந்தும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கைக்கு தன்னியக்க டெலர் இயந்திரங்களை (ஏடிஎம்) அறிமுகப்படுத்தியமை, நீட்டிக்கப்பட்ட வங்கிச் சேவை நேரம் மற்றும் படிவமில்லா வங்கிச்சேவை உள்ளிட்ட பலவற்றை இலங்கை வங்கித் துறைக்கு இது அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள வங்கி என்ற பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து ‘வங்கிச்சேவையில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப நிறுவனமாக’ வங்கி தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right