(எம்.மனோசித்ரா)
கொவிட் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அவற்றை களஞ்சியப்படுத்துவதற்கும், உரியவர்களுக்கு வழங்குவதற்குமான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒத்திகைகளும் நிறைவடைந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசிகளை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. அத்தோடு ஒத்திகைகளும் நிறைவடைந்துள்ளன. எனவே தடுப்பூசி நாட்டை வந்தடைந்ததன் மறுநாளிலிருந்து அதனை வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகிவிடும். தடுப்பூசியை முதற்கட்டமாக யாருக்கு வழங்குவது , அடுத்தகட்டமாக யாருக்கு வழங்குவது என்பவற்றுக்கான ஒழுங்குபடுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் வந்தடைந்ததன் பின்னர் அதனை களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்து செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஒத்திகைகளும் இராணுவத்தின் பங்கேற்புடன் நடைபெற்றன. பிரதானமாக கொழும்பில் அவற்றை களஞ்சியப்படுத்துவதற்கும் , ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் போது அங்கு களஞ்சியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்கு ஏதுவான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான இடங்களுக்கு தேவையானோர் வரவழைக்கப்பட்டு அவ்விடங்களிலேயே தடுப்பூசி ஏற்றப்படும். மாறாக ஒவ்வொரு இடங்களுக்கும் எடுத்துச் சென்று தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என்றார்.