கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள பாடசாலைகளைத் தவிர, மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளில் தரம் 11 வகுப்புகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தரம் 2-13 ஆம் வகுப்புகளுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது ஜனவரி 11 முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை கற்பிக்கும் வகையில் அதற்கான முன்னுரிமைத் தேவையை கவனத்திற் கொண்டு  மேல் மாகாணத்தின் தரம் 11 வகுப்பு மாணவர்கள் தொடர்பில் இந்த முடிவு கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவ‍ேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வெளியிடுவதற்கும் கல்வியமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர்களின் பல்கலைக்கழக நுழைவு நடவடிக்கைகளை மிகக் குறுகிய காலப்பகுதியில் பெற்றுக் கொடுப்பதற்கும் கொவிட் காரணமாக அவர்கள் இழந்த காலத்தினை பாதிப்பின்றி மீள கவர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்தப்பட வேண்டியிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது இந்த வருடம் மார்ச் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால் மாணவர்களுக்கு எந்தவொரு இழப்போ அல்லது கால வீணடிப்போ ஏற்படாத வகையில், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கும் நடவடிக்கை கல்வியமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அம் மாணவர்களுக்கான  உயர் தர வகுப்புகளை  ஜூலை மாதமளவில் ஆரம்பிப்பதற்கும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும்/பெறாத தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் வருடத்தில் தரம் 01 இன் சிறார்களுக்காக முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் நிகழ்வினை பெப்ரவரி 15 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டில் பாடசாலைகளை ஆரம்பிப்பது என்பது மிகவும் சவால் மிக்கவொரு ஒரு தீர்மானம் எனவும், பிள்ளைகளது கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் கால தாதமின்றியும் மேற்கொள்ளும் பொருட்டு மேற்படி தீர்மானத்தினை பொறுப்புடனும், சுகாதார தரப்பினரது முழுமையான ஆலோசனைகளுடன் மேற்கொண்டதாகவும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் விரிவான வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (www.moe.gov.lk) மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து, பாடசாலைகளில் ஓய்வு நேரங்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான அறிவுறுத்தல்கள் உள்ளடங்கிய வழிகாட்டுதல்கள் சகல பாடசாலைகளுக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.