(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் இன்று திங்கட்கிழமை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. 

Reopen Sign Stock Illustrations – 960 Reopen Sign Stock Illustrations,  Vectors & Clipart - Dreamstime

சுகாதார அமைச்சின் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் சாதாரணதர மாணவர்களுக்காக பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டு இவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் மேல் மாகாணத்தில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

எனினும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மாத்திரம் நாளை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய மேல் மாகாணத்தில் 907 பாடசாலைகள் நாளை மீள திறக்கப்படுகின்றன. இந்த பாடசாலைகளிலிருந்து 73 393 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இவர்களில் 236 பரீட்சாத்திகள் இரண்டாவது அமர்வில் பாடசாலைகளுடாக பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இந்த 907 பாடசாலைகளும் 11 கல்வி வலயத்திற்குட்பட்ட 38 தொகுதிகளில் உள்ளவையாகும்.

வலக கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்த தென்னகோன் தலைமையில் இடம்பெற்ற விசேட கண்காணிப்பின் மூலம் பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு முறையாக செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் , நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கல்வி அமைச்சினால் நிதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே அந்த ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் எவ்வித சிக்கலும் கிடையாது. மாணவர்கள் அச்சமின்றி பாடசாலைக்கு வந்து கற்றலை தொடரலாம். மேல் மாகாணத்தில் ஏனைய மாணவர்களுக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்றார்.