(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் அனைத்தும் நாளை முதல் வழமைக்கு திரும்பவுள்ளது. கொழும்பு கோட்டை புகையிர நிலையத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி காலை 8.50 க்கு புறப்படும் புகையிரத சேவை மறுஅறிவித்தல் விடுக்கும் வரை நிறுத்தப்பட்டுள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொலன்னறுவை - கொழும்பு கோட்டை , மாத்தளை - கொழும்பு கோட்டை, யாழ்ப்பாணம் - கொழும்பு கோட்டை  மற்றும் பதுளை - கொழும்பு கோட்டை ஆகிய பிரதேசங்களுக்கான புகையிரதசேவை நாளை மாத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தினந்தோறும் காலை 08.50 மணிக்கு கொழும்பு கோட்டை தொடக்கம் தலைமன்னார் வரை  புறப்பட  தயாராகவிருந்த  புகையிரத சேவை  தவிர்க்க முடியாத  காரணத்தினால்  மறு அறிவித்தல் விடுக்கும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. வெகுவிரைவில் சேவையினை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் புகையிரத சேவையில் முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு  பின்னர் புகையிரத நிலையங்களுக்கு கிருமி தொற்று நீக்கி திரவம், முகக்கவசம் ஏதும் வழங்கப்படவில்லை. புகையிரத திணைக்களம் இவ்விடயத்தில் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.

புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் புகையிரத நிலையங்களில் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. முகக்கவசத்தை கழுத்து பகுதிக்கு அணிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செயற்படுபவர்கள் இனிவரும் காலங்களில் புகையிரத நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றார்.