(இராஜதுரை ஹஷான்)
புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் தங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அரச மற்றும் தனியார் துறையினரது சேவை நேரத்தை மாற்றியமைத்தால் புகையிரத சேவையில் சமூக இடைவெளியை பேண முடியும். அதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் டிலந்த பிரனாந்து தெரிவித்தார்.

பொதுபோக்குவரத்து சேவையில் பயணிகள் நெருக்கமாக பயணம் செய்யும் போது கொவிட்-19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவும் அபாய நிலை காணப்படுவதாக சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், பொதுபோக்குவரத்து சேவையின்  ஊடாக கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலடையும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். புகையிரத சேவை பாதுகாப்பான முறையில் தற்போது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படுகிறது. புகையிரத திணைக்களத்தில் காணப்படும் வளங்களை அடிப்படையாக கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை செயற்படுத்த முடியும்.

ஒரு புகையிரதம் சேவையில் ஈடுப்பட முன்னரும், சேவையில் ஈடுப்பட்ட பின்னரும் கிருமி தொற்று நீக்களுக்கு உட்படுத்தப்படுகிறது. புகையிரத நிலையங்களுக்கு பிரவேசிக்கும் போது முகக்கவசம் அணிதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினர் வழியுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை இயலுமானளவில் செயற்படுத்தியுள்ளோம் என்றார்.

1 மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது தொற்றினை கட்டுப்படுத்தும் பிரதான பாதுகாப்பு அறிவுறுத்தலாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை புகையிரத சேவையில் குறிப்பாக காலை, மாலை அலுவலக புகையிரத சேவையில் கடைப்பிடிப்பது சாத்தியமற்றதாக உள்ளது. இது அச்சுறுத்தலான தன்மையாகவே காணப்படுகிறது என்றார்.