மட்டக்களப்பு உறுகாமம் குளத்தில் காணாமல்போன இளம் மீனவரின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 24.01.2021 கடற்படைச் சுழியோகள் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

உறுகாமம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிமுஹம்மது நப்ராத் (வயது 24) என்ற இளம் குடும்பஸ்தர் நேற்று சனிக்கிழமை 23.01.2021 பகல் மீன் பிடிக்கச் சென்றபோது உறுகாமம் குளத்தில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மீனவர் காணமல் போயுள்ள தகவல் தெரிந்ததும் உறவினர்களும் மீனவர்களும் தேடுதலில் ஈடுபட்டனர். அதேவேளை அவரைத் தேடும் பணியில் கடற்படைச் சுழியோடிகளும் இணைந்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் குறித்த மீனவரின் சடலம் உறுகாமம் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

உறுகாமம் குளம் தற்போது நீர் நிரம்பியுள்ளதாலும் அந்தக் குளத்தின் சுற்றளவு சுமார் 12 மைல்கள் உள்ளதாலும் குளத்தில் நீரோட்டம் நிலவுவதாலும் தேடுதல் பணிகள் சிரமம் அடைந்திருந்ததாக அப்பகுதி  மீனவர்கள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைகளுக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.