அவுஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் ஏனையோரின் கொவிட் தொற்று விபரங்கள் மறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மெல்போர்னுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி. ஓபனில் பங்கெடுக்கும் வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் குழுவில் இதுவரை ஒன்பது பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தற்போது மெல்போர்ன் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய ஓபனுக்காக ஹோட்டல்களில் தனிமைப்படுததப்பட்டுள்ள 970 பேரில் பெரும்பாலானோர் 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தின் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளனர். 

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 72 வீரர்கள் தங்கள் அறைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் டென்னிஸுடன் தொடர்புடைய நான்கு வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் ஸ்பெய்ன் வீராங்கனையான பவுலா படோசா மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

சோதனை முடிவு உறுதிசெய்யப்பட்டமையினால் படோசாவின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் 23 வயதான படோசாவுக்கு பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகும் ஆஸி. ஓபனுக்காக ஆயத்தம் ஆவதற்கு நேரம் இல்லை.