இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். நாட்டிற்குத் தேவையான கொவிட் மருந்துகளை விரைவாக கொண்டுவருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.

'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சித் திட்டத்தின் 7வது வேலைத்திட்டத்தில் நேற்று பங்கேற்ற போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். களுத்துறை, வளல்லாவிட்ட, யட்டபாத்த கிராமத்தில் இந்த திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடதக்கது. 

மேலும், பல்வேறு விடயங்கள் குறித்து உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் தன்னை அதிகாரத்திற்கு கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். எதிர்வரும் நான்கு வருட காலப்பகுதியில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு  நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.