(எம்.மனோசித்ரா)

நாட்டில் பல பகுதிகளிலும் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் அபாயமுடையதாக அறியப்படும் பகுதிகள் முடக்கப்படுகின்றன.

அதற்கமைய இன்று சனிக்கிழமை மாலை முதல் அநுராதபுரம் மாவட்டத்தின் தேவநம்பியதிஸ்ஸபுர (திசாவாவி முதலவாம் பகுதி ) 295 ஏ, கிராம அலுவலர் பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் இருவருக்கும் இராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கும் பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் பியர் நிஷாந்தவிற்கு தொற்றுறுதி செய்யப்பட்டது. அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிசுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை 6 மணி வரை 724 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 57,587 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 48,617 பேர் குணமடைந்துள்ளதோடு , 8048 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை மரணங்களின் எண்ணிக்கையும் 278 ஆக உயர்வடைந்துள்ளது.