(ஆர்.யசி)

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர் இல்லத்திலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு  உற்படுத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாவலர் மற்றும் வீட்டு பணியாளர்களையும், அமைச்சரவை அதிகாரிகளையும் தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் குழு கூட்டத்திலும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கலந்துகொண்ட நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட சகல அமைச்சர்கள், பாராளுமன்ற உருபினர்களையும் சுய தனிமைப்படுதலில் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்  கடந்த வாரம் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே  தற்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அவர் ரபிட் அன்டிஜன் பரிசோதனைக்கு உற்படுத்தப்படவில்லை எனவும், பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, தனது இல்லத்திலேயே சுய தனிமைப்படுதலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கடந்த வியாழக்கிழமை, நீளும் மாவத்தயையும் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அரசியல் கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

எனவே கூட்டத்தில் கலந்துகொண்ட சகல உறுப்பினர்களையும் சுயமான பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும், சுய தனிமையில் அனைவரையும் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் சுகாதார பணிப்பகம் தெரிவித்துள்ளது.