Published by T. Saranya on 2021-01-23 18:52:23
இந்தியாவில் மசினகுடி மாவனல்லா பகுதியில் இரவு நேரத்தில் தனியார் விடுதி அருகே காட்டு யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து காட்டு யானை மீது வீசியதில் காயமடைந்த யானை உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்துள்ளது. அதற்கு வனத்துறையினர் பழங்களுக்குள் மருந்து மாத்திரைகளை மறைத்து வைத்து தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர். இருப்பினும் குணமடையவில்லை.
இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் அந்த காட்டு யானையை பிடித்து காயத்துக்கு இரண்டு மணி நேரம் சிகிச்சை அளித்து பின்னர் விடுவித்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 1 வாரத்துக்கு முன்பு மரவகண்டி நீர்த்தேக்கத்துக்குள் காட்டு யானை தண்ணீருக்குள் நின்றவாறு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் காட்டு யானையை பார்வையிட்டபோது இடது பக்க காதில் பலத்த தீக்காயம் இருப்பதையும், காதின் சிறிய பகுதி துண்டாகி கீழே விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 19 ஆம் திகதி காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க லொறியில் ஏற்றி கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், காட்டு யானைக்கு சிலர் தீ வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக வெளியாயுள்ளது.
இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக வனத்துறையின் தனிப்படையினர் விசாரணை நடத்தியுள்ளார்கள்.
அதில் 3 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து,அதில் 2 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து துணை இயக்குனர் தெரிவித்துள்ளதாவது,
காட்டு யானைக்கு தீ வைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை தேடி வருகிறோம். இதுபோன்று ஈவு, இரக்கம் இல்லாமல் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையில் காட்டுயானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்த தனியார் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.