(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சியில் இருக்கும் போது தேசப்பற்றுள்ளவர்களாக செயற்படும் அரசியல்வாதிகள் ஆளும் கட்சிக்கு வந்த பிறகு தேசப்பற்றினை மறந்து விடுகிறார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கியதால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் கிடையாது. இவ்விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாக செயற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கும் போது அரசியல் மற்றும் சமூகமட்டத்தில் பல எதிர்ப்புக்கள் காணப்பட்டன. அப்போது ஆளும் தரப்பில் இருந்த தற்போதைய எதிர்க்கட்சியினர் இன்று வெளிப்படுத்தும் தேசிய பற்றினை வெளிப்படுத்தவில்லை. அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை செயற்படுத்தவே ஆதரவு வழங்கினார்கள்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கினால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை பகிரங்கப்படுத்தினேன். நல்லாட்சி அரசாங்கத்தில் முரண்பட்டுக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது.தேசிய வளங்கள் குறித்து எதிர்க்கட்சியினரின் நிலைப்பாடு ஆளும் கட்சிக்கு வந்த பிறகு மறக்கப்படுகிறது தற்போது இத்தன்மையே நிலவுகிறது.

அம்பாந்தோட்டை  துறைமுகம் சீனாவுக்கு  வழங்கியுள்ளதால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாக தீர்மானம் எடுக்கலாம். பின்வாங்குவதற்கான எவ்வித நிபந்தனைகளும் இவ்விடயத்தில் கிடையாது என்றார்.