இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத ரொமான்டிக் கொமடி படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

'சிவா மனசுல சக்தி' என்ற படத்தின் மூலம் புதிய தலைமுறை இளைஞர்களின் காதலை டிஜிட்டலில் செதுக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் ராஜேஷ்.

தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற வெற்றிப் படங்களை வழங்கி, முன்னணி இயக்குனராகவும் முன்னேறினார்.

அதைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க', 'கடவுள் இருக்கான் குமாரு', 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிலும், கொமடியிலும், விமர்சனத்திலும் வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் ஜீ வி பிரகாஷ் குமாருடன் இணைந்து பணியாற்றுகிறார்.

இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தில் ஜீ வி பிரகாஷ் குமாருடன் 'பிகில்' பட புகழ் அமிர்தா ஐயர், பிக் பொஸ் பிரபலம் ரேஷ்மா, டேனியல், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ரசிகர்களின் இரசனையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர்ந்து இந்த திரைப்படம் தயாராகி வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.