(ஆர்.யசி)

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலை துறைமுகம் நோக்கி பயணமாகிய லைபீரியா நாட்டு கப்பலான எம்.வி. யுரோசன் (EUROSUN) திருகோணமலை துறைமுகத்தில் இருந்து 12.6 கடல் மைல் தொலைவில்  உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியா நாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் கப்பலானது கப்பல் ஜனவரி 8 ஆம் திகதி  அபுதாபியில் இருந்து சீமெந்து மற்றும் கட்டுமான பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை நோக்கி பயணமாகியுள்ள நிலையிலேயே இன்று (23.01.2021) நண்பகல் அளவில் சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் அளவில் குறித்த கப்பலில் தளபதியினால் இலங்கை கடற்படைக்கு விபத்து குறித்து அறிவிக்கப்பட்டதை அடுத்து இலங்கை கடற்படையின் இரண்டு படகுகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சளார் இந்திக டி சில்வா தெரிவித்தார்.