(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் உள்ள தேசிய வளங்கள் ராஜபக்ஷக்களின் குடும்ப சொத்தல்ல. தான்தோன்றித்தனமாக பிற நாட்டவர்களுக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாக்கு வழங்க அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் கட்சி பேதங்களை துறந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

69 இலட்சம் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இராணுவ ஆட்சியிலான நிர்வாகம் செயற்படுத்தப்படும் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டேன்.

அரச நிர்வாகம் தொடர்பில் புலமையற்ற ஒருவரை ஜனாதிபதியாக்கி இன்று அரச சிவில் சேவைகள் அனைத்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளன. 69 இலட்சம் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

அரச சேவையிலும், உயர் அரச பதவிகளிலும் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சிவில் சேவைகள் குறித்து புலமைப்பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

இராணுவ ஆட்சியினை கொண்டுள்ள நாடுகளிலும் ஆரம்பத்தில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது என்பதை நாட்டு மக்கள் தற்போதாவது புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் உள்ள தேசிய வளங்கள் ராஜபக்ஷக்களின் குடும்ப சொத்து அல்ல. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டுள்ளன.

இந்தியாவின் அதானி நிறுவனத்தை அந்நாட்டு மக்கள் எதிர்க்கின்ற நிலையில் அரசாங்கம் அந்த நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்தை வழங்க தீர்மானித்துள்ளமை நகைப்புக்குரியது.

நல்லாட்சி அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு கொடுக்கும் போது முன்னின்று போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் இன்று  இந்தியாவுக்கு அடிபணிந்து கிழக்கு முனையத்தை தாரைவார்க்க முயற்சிக்கிறார்கள்.

49 சதவீத உரிமம் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடுவதை புத்திசாலியான மக்கள் எற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தேசிய வளங்கள் ஒரு குடும்பத்தின் சொத்தல்ல. தான்தோன்றித்தனமாக செயற்பட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அரசியல் கட்சி பேதங்களை துறந்து எதிர்க்க வேண்டும் என்றார்.