மேல் மாகாணத்தில் 1001 நிறுவனங்கள் அடையாளம் : 800 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு - அஜித் ரோஹண

By Digital Desk 2

23 Jan, 2021 | 01:49 PM
image

(செ.தேன்மொழி)


மேல்மாகாணத்தில் கடந்த 12 தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட 1001 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவற்றில் 800 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

மேல்மாகாணத்தில் காணப்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வரும் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கமைய இதுவரையில் 6919 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள் 5918 நிறுவனங்களில் சுகாதார சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்பட்டிருந்தன. சுகாதார விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 1001 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 800 நிறுவனங்களுக்கு எதிராக இது வரையில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.

இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 878 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் , அவற்றில் 785 நிறுவனங்கள் முறையான சட்டவிதிகளை கடைப்பிடித்திருந்தமை அவதானிக்க கூடியதாக இருந்தது.

86 நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டிருந்ததுடன் , அவற்றுக்கு எதிராகவும் எதிர்வரும் தினங்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

மேல்மாகாணத்தில் வார இறுதி தினங்களில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளும் , மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right